Friday, October 15, 2010

இந்தியாவிற்கான தனி கணினி இயக்க மென்பொருள்

இந்தியாவிற்காகவே பிரத்யேகமான கணினி இயக்க மென்பொருள் உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defence Research and Development Organization - DRDO) ஈடுபட்டு வருவதாக அதன் இயக்குனரும், விஞ்ஞானியுமான முனைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முனைவர் வி.கே.சரஸ்வத், “மென்பொருளை உருவாக்கத்தைப் பொறுத்தவரை நம்மிடம் பல குறைபாடுகள் உள்ளன, அதில் முக்கியமானது நமக்கென்று தனித்த கணினி இயக்க அமைப்பு இல்லாமையே. பாதுகாப்பு, பொருளாதாரம், வங்கி ஆகிய துறைகளில் நாம் சேமித்து வைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளைக் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நமக்கென்று தனித்த கணினி இயக்க அமைப்பு அவசியமாகிறது” என்று கூறிய சரஸ்வத்,
அப்படிப்பட்ட புதிய கணினி இயக்க மென்பொருள் (Operating System -OS) உருவாக்க டெல்லிலும், பெங்களூருவிலும் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த இரு மையங்களின் ஒரே செயல் இலக்கு, இந்தியாவிற்கென தனித்த கணினி இயக்க அமைப்பை உருவாக்குவதே என்று கூறிய சரஸ்வத், தேச அளவிலான இந்த மாபெரும் முயற்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் முன்னெடுக்கிறது என்றும், இதற்கு பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் இயங்கும் மென்பொருள் நிறுவனங்களும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், சென்னையிலுள்ள இந்திய தொழிற் கல்விக் கழகம் ஆகியவற்றின் உதவிகள் நாடப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

“இணையத்தின் சந்தேகத்திற்குரிய நம்பகத்தன்மை, நமது முக்கியத் துறைகளின் கணினிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாம் சேமித்து வைத்து முக்கியத்துவம் வாய்ந்த தரவுகள் களவாடப்பட்டமை ஆகியன நமக்கென்று தனித்த இயக்க அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நாம் நமது தரவுகளை பாதுகாத்தாக வேண்டும், அதற்கு ஒரே வழி நமக்கான கணினி இயக்க அமைப்பை நாமே உருவாக்க வேண்டும், அது நமது முழுமையான தனித்த தொழி்ல்நுட்பமாக இருக்கவேண்டும். அதன் ஆதார விதி (Source Code) நம்மிடம் இருக்கும். அது என்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்று விரிவாக பேசியுள்ளார்.

பெங்களூருவிலும், டெல்லியிலும் உள்ள மையங்களில் இதற்காக 50 மென்பொருள் நெறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான அரசின் ஒப்புதல்கள் கோரப்பட்டுள்ளது என்றும் சரஸ்வத் கூறியுள்ளார். பாதுகாப்புக் காரணங்ளால் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்களைத் தர இயலாது என்றும் சரஸ்வத் கூறினார்.
thanks inneram.com

No comments:

Post a Comment