Friday, October 29, 2010

எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம் செல்லும் என உத்தரவு

பெங்களூரு : கர்நாடக மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது.

கர்நாடகாவில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்ட போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி கோரி, பா.ஜ., கட்சித் தலைமையை கடுமையாக வற்புறுத்தி விமர்சித்தனர்.அதேநேரத்தில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் கட்டா சுப்ரமணிய நாயுடு தொடர்பான நில ஊழல் விவகாரமும் விஸ்வரூபமடைந்தது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ரகசிய ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, எடியூரப்பா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். இதனால், அக்டோபர் 12ம் தேதிக்குள் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கடந்த 11ம் தேதி, சட்டசபையின் அவசர கூட்டம் நடந்தது. ஓட்டெடுப்புக்கு முன்னதாக, பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் போப்பய்யா அதிரடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. இந்த ஓட்டெடுப்பு விதிமுறைப்படி நடக்காததால், மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.இதனால், மீண்டும் கடந்த 14ம் தேதி கர்நாடக சட்டசபையில் இரண்டாவது முறையாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், ஆறு ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. இதற்கிடையே, 11 அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடக ஐகோர்ட்டில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது என்றும், அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி கேஹார் சிங் தீர்ப்பளித்தார்.அதேநேரத்தில், மற்றொரு நீதிபதியான குமார், மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். நீதிபதிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவியதால், இந்த வழக்கை 20ம் தேதி, மற்றொரு நீதிபதி தலைமையில் நடத்துவதாக டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்தது.கடந்த 20ம் தேதி, 11 அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் வக்கீல்கள் ஆச்சார்யா, ரவிவர்மா, ராகவன் ஆகியோரின் வாதமும், 21ம் தேதி அரசு தரப்பில் ஆஜரான சொலி சொராப்ஜி, சத்யபால் ஜெயின் ஆகியோர் வாதமும் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சபாஹித், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. "ஜகத் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, தற்போது வழக்கு தொடர்ந்துள்ள 11 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருகின்றனர். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நாங்கள் வர மாட்டோம் என்பதற்கு ஆதாரமாக இந்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்துள்ள விவரங்கள், பரிசீலனைக்கு உகந்ததாக இல்லை.எனவே, இந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது தான்' என்று நீதிபதி சபாஹித் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது. முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆளும் கட்சியினர் இத்தீர்ப்பு கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதையடுத்து, 11 பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர் தொடர்ந்த வழக்கு, நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சத்தியம் ஜெயித்தது  பா.ஜ., மகிழ்ச்சி : "கர்நாடகாவில், அணி மாறிய 11 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என, அம்மாநில ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. "சத்தியம் ஜெயித்துள்ளது' என்றும் கூறியுள்ளது.இதுதொடர்பாக பா.ஜ., தகவல் தொடர்பாளர் தருண் விஜய் மேலும் கூறியதாவது:தீபாவளி நேரத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு, நீதித்துறை மக்களுக்கு கொடுத்துள்ள சிறந்த பரிசு. கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் எடுத்த நடவடிக்கையை கர்நாடக ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதியும் அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பால் பா.ஜ., கட்சி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையும் பா.ஜ., கட்சி வரவேற்கிறது.இவ்வாறு தருண் விஜய் கூறினார்.
thanks all dinamalar.com

No comments:

Post a Comment