Friday, November 19, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 6-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தொடர்ந்து 6-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் இரண்டு வாரங்கள் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் நடைபெறாமல் போனது.
எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதில் காங்கிரஸ் கட்சியினரோடு மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு, கர்நாடக பாஜக-வுக்கு எதிராக கோஷமிட்டனர். முன்னாள் பிரதமர் தேவகெளடா, பாஜகவுக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று மக்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவை நடவடிக்கைகளை நடத்தவிடாமல் கோஷங்கள் எழுப்பினர். இதனால் திங்கள்கிழமை வரை ஒத்திவைத்தார் மக்களவைத் தலைவர் மீரா குமார். குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 9-ம் தேதி மட்டும் நடைபெற்றது. அன்றைய தினம் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா-வின் செயல்பாடுகளைக் குறை கூறியிருந்தது சிஏஜி. பிரதமர், நிதி அமைச்சர், சட்ட அமைச்சரின் ஆலோசனைகளை ஏற்கவில்லை என்றும், ஏல நடைமுறை பின்பற்றாததால் அரசுக்கு | 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. காலையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். ஆனால் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு நாடாளுமன்ற கூட்டு விசாரணை தேவை என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் ஹமீத் அன்சாரி.(dinamani)

No comments:

Post a Comment