Friday, November 19, 2010

தூத்துக்குடியில் மின்உற்பத்தி நிறுத்தம்: மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

 நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் , இரு யூனிட்டுகளின் மொத்தம் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மொத்தம் ஐந்து யூனிட்டுகள் உள்ளன. மின்உற்பத்திக்காக, ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஒருநாளைக்கு 3,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இங்கு, மத்திய அரசின் நிலக்கரி நிறுவனம் மற்றும் மேற்கு வங்கத்திலுள்ள அசென்சால் சுரங்கத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இரு யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்: மழைகாரணமாக நிலக்கரி வரத்து குறைந்து, போதுமான நிலக்கரி கையிருப்பில் இல்லாததால் 2, 3வது யூனிட்டுகளின் மின்உற்பத்தி செய்யப்படுவது கடந்த சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. நேற்று மதிய நிலவரப்படி முதலாவது யூனிட்டில் 117 மெகாவாட், நான்காவது யூனிட்டில் 189 மெகாவாட், ஐந்தாவது யூனிட்டில் 162 மெகாவாட் என மொத்தம், 468 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. மூன்று யூனிட்டுகளின் மொத்த மின்உற்பத்தியில், 162 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரு யூனிட்டுகள் மூடப்பட்டதால், 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், 582 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

காரணம் என்ன: அனல்மின் நிலைய ஊழியர் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் அப்பாதுரை கூறும்போது,""முன்பெல்லாம்,30 நாட்களுக்கு மின்உற்பத்தி செய்யத்தேவையான நிலக்கரி இருப்பில் வைக்கப்படும். நிர்வாக சீர்கேடு காரணமாக, அந்நிலைமாறிவிட்டது. தற்போது, 5,000 டன் நிலக்கரி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதை, ஓடக்கூடிய மூன்று யூனிட்டுகளிலும் முழுமையாக பயன்படுத்த முடியாது என்பதால், அவ்வப்போது பர்னஸ் ஆயிலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயிலை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்ய ஒருநாளைக்கு, 6.5 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும். மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்று இருப்பதால், அதில் 60 சதவீதம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் சாம்பலாகிறது. மொத்தத்தில், தமிழக அரசு தனியாரிடமிருந்து அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்குவதை ஊக்கப்படுத்தவே, மின்வாரியம் இவ்வாறு செயல்படுகிறது,'' என்றார்.

மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம்: தமிழகத்தில் தற்போது தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி குறைந்ததால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நிலைமை விரைவில் சீராகும்: இதுகுறித்து, தூத்துக்குடி அனல்மின்நிலைய மேற்பார்வைபொறியாளர் (செயலாக்கம்) அமிர்தராஜிடம் கேட்டபோது,""ராஜஸ்தானிலிருந்து வந்த நிலக்கரி கட்டியாகிவிட்டது. அதனால், அதை உடைத்து மின்உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டியுள்ளதால், இரு யூனிட்டுகள் மூடப்பட்டன. மற்ற மூன்று யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. போதுமான நிலக்கரி இருப்பில் உள்ளதால், விரைவில் முழுவீச்சில் மின்உற்பத்தி துவங்கும்,'' என்றார். இதனிடையே கப்பலில், நிலக்கரி வந்துகொண்டுள்ளதாக அனல்மின்நிலையம் தரப்பில் கூறப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அதுவரவில்லையெனில் மேலும், ஒரு யூனிட்டை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.(dinamalar)

No comments:

Post a Comment