Saturday, November 6, 2010

சூறாவளியாய் சுழன்று வரும் ஆவிகள்!

மீன்கள் கூட்டமாக துள்ளுவதுபோல் சத்தம்... வலை விரிச்சா எதுவும் சிக்குவதில்லை. பரிசலில் பலர் மீன் பிடிப்பதுபோல் தெரிகிறது... பக்கத்தில் போனா ஆளே இருக்க மாட்டாங்க. காவிரி ஆற்றுப் பகுதியில்தான் இந்த மாயாஜாலம். அங்கே என்ன நடக்குது. ஆத்துல மீன் மாதிரி ஓடுறது யாரு, அரூபமாக பரிசலில் மீன் பிடிப்பது யாரு... இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும், ‘எல்லாம் ஆவிகள் செய்யற சேட்டைதான்’ என்கின்றனர்.

பெத்து வளர்த்த பிள்ளைங்க வயதானதால விரட்டியடிச்சிட்டாங்க, காதலுக்கு வீட்ல எதிர்ப்பு, கள்ளக்காதல் அம்பலமானதால் அவமானம்.. இப்படி பல விஷயங்களால் மனம் நொந்தவர்கள் நிம்மதி தேடிச் செல்லும் இடம் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணை. காவிரி ஆறுதான் அவர்களுக்கு அடைக்கலம். விரக்தியோடு வந்து விழுபவர்களை கட்டித்தழுவி விழுங்கிவிடுகிறது ஆற்று நீர்.

தானாக விழுந்து உயிரை மாய்ப்பவர்கள் ஒரு பக்கம். போதையில் ஆற்றில் இறங்குபவர்கள், கவனக் குறைவாக குளிப்பவர்கள், பரிசலில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுபவர்கள் என்ற வகையிலும் மரணக் கணக்கு அதிகரிக்கிறது.இவர்களது உடல் பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளான கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை, ஏமனூர் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன. அற்ப ஆயுளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் பலரது உடல் கரையில் ஒதுங்கி அழுகி, எலும்புக்கூடாகி கிடக்கிறது.

ஆனால், அவர்களது ஆவி மட்டும் காவிரிக் கரையையே சுற்றிச்சுற்றி வருகிறதாம். சொந்த, பந்தங்களை தேடி கரையோர கிராமங்களுக்கும் ஆவிகள் விசிட் அடிப்பதாக சொல்கின்றனர். வழியில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. பல உயிர்களை பலி வாங்கி, தனக்கு துணை சேர்த்துக் கொள்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையூர் பரிசல் துறை. மீனவ குடும்பம் ஒன்று பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. பச்சை குழந்தையுடன் பெண்ணும் வலை வீசினார். உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு சத்தம். கண் மூடி கண் திறப்பதற்குள் சூறாவளியாய் வருகிறது காற்று. அவ்வளவுதான் பரிசல் தலைகுப்புற மிதந்தது. அதிலிருந்த பெண்ணும், அவளது கைக் குழந்தையும் நீரில் பிணமாக மிதந்தனர்.
சுழன்றடித்த சூறாவளியாய் வந்தது வேறு எதுவும் இல்லை.. ஆவிகளின் அட்டகாசம்தான் என அஞ்சியபடி சொல்கிறார்கள் மீனவர்கள். இதனால், பெரும்பாலும் உச்சிவெயில் நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. மீனவர்கள், கரையோர விவசாயிகளுக்கு மதிய உணவு கொடுக்க வரும் பெண்களையும் ஆவிகள் பிடித்து பாடாய்படுத்துகிறதாம்.

சடலங்கள் அதிகம் ஒதுங்கும் கரையோர பகுதிகளில் அடிக்கடி சலங்கை ஒலி கேட்பதாகவும், பெண்கள் தங்களை ஆசையாய் அழைப்பது போன்று இருப்பதாகவும் மீனவர்கள் பீதியுடன் கூறுகின்றனர். கரையோர கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பெண்கள் பேய் பிடித்த நிலையில் கோயில்களுக்கும், மந்திவாதிகளை தேடியும் படையெடுத்து வருகின்றனர். ஆவி பீதியால் கிராம மக்கள், மீனவர்களின் கையிலும், இடுப்பிலும் டஜன் கணக்கில் மந்திரரித்த தாயத்துகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆவிகளின் அட்டகாசம் அதிகமாகி விடுகிறதாம். இதனால் அந்த நாட்களில் மீனவர்களும் விவசாயிகளும் தொழிலுக்கு லீவு விட்டு விடுகின்றனர். அதையும் மீறி மீன் பிடிக்க சென்றவர்களில் சிலர் திரும்பி வரவில்லை என்கின்றனர்.
“நடுராத்திரியில ஊரு பக்கமா ஆவிங்க வந்து போகும். அப்ப நாய்ங்க எல்லாம் ஒரே நேரத்துல ஊளையிடும். சில நேரத்துல ஊரே மயான அமைதியில இருக்கும். அப்ப, வினோதமா ஒரு சத்தம் கேட்கும். பல பேரு என்னென்னமோ பூஜையெல்லாம் செஞ்சி பாத்துட்டாங்க. ஆனா, ஆவிங்க அடங்குனா மாதிரி தெரியல” என்று பீதி கிளப்புகிறார் ஒரு பெரியவர்.

பண்ணவாடி பரிசல் துறையில் மீன் வறுத்து விற்கும் 70 வயது லட்சுமி பாட்டி சொல்றாங்க..

வாழவேண்டிய வயசுல உசுர விடுறவங்களோட ஆவி இந்தப் பக்கம் அதிகமா சுத்திட்டுதான் இருக்கு. ஒரு நாள் வேலமங்கலம் கரட்டுப் பகுதியில புருஷனும் பொஞ்சாதியும் மீன் பிடிச்சிட்டு இருந்தாங்க. திடீர்னு மழையும் காத்தும் சேந்து வந்துடுச்சி. பரிசல பாறை மறைவுல நிறுத்திட்டு திரும்பியிருக்காங்க. கரையில பரக், பரக்குனு சத்தம் கேட்டிருக்கு. உத்து பாத்தப்ப குழந்த மாதிரி ஒரு உருவம் தெரிஞ்சிருக்கு. ரெண்டு பேருக்கும் தூக்கி வாரிப்போட்டுடுச்சாம். கரைக்கு ஓடிவந்து, அங்க நிறுத்தியிருந்த வண்டிய எடுத்துக்கிட்டு புறப்பட்டாங்க. அப்ப அந்த குழந்தை உருவம் வானத்துக்கும், பூமிக்குமா எழுந்து நின்னுச்சாம். உசுரு தப்பி வூட்டுக்கு வந்தவங்கதான். அப்புறம் குளிர்காய்ச்ச வந்து படுத்த படுக்கையாயிட்டாங்க. பாடம் போட்டு, எந்திரம் கட்டி, மருத்துவம் பார்த்து அவங்க மீண்டு வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சி... படபடப்பு நிற்காமல் சொல்லி முடித்தார் பாட்டி.
ஆவி பீதியில் இன்னமும் பல கிராமங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

thanks dinakaran

No comments:

Post a Comment