Wednesday, November 24, 2010

மற்ற ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல்: சுப்ரீம் கோர்ட்



 "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதியளிக்க பிரதமருக்கு உத்தரவிடும்படி சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில்,
அட்டர்னி ஜெனரலும், சாமியும் தங்கள் பதில் மனு மீது வாதிட்டனர். இந்த வாதத்தைத் தொடர்ந்து, நீதிபதிகள் சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வாகன்வதியிடம் நேற்று கூறியதாவது: ராஜா மீது வழக்குத் தொடர அனுமதி கோரிய சாமியின் மனுவை, பிரதமர் மன்மோகன் சிங் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். இல்லையெனில், அவர் உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். சாமியின் மனுவானது கடிதமாகத்தான் இருந்தது, ஒரு புகார் மனுவாக இல்லை என்பதே உங்களின் வாதம். அப்படியெனில், அதை ஏன் உங்களின் பதில் மனுவில் குறிப்பிடவில்லை. இந்த வேறுபாட்டை எல்லாம் அட்டர்னி ஜெனரலான உங்களுக்கு நாங்கள் எடுத்து சொல்ல வேண்டியதில்லை. பிரதமர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலும், இதுபற்றி குறிப்பிடாததால், இது தொடர்பான வாதத்தை நாங்கள் ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அப்போது வாகன்வதி குறுக்கிட்டு, "பதில் மனுவில் அதை குறிப்பிட்டுள்ளேன்' என்றார். இதை ஏற்காத நீதிபதிகள், "உங்கள் வாதப்படி இது புகாராக இல்லை. கடிதம் தான் என்றால், அனுமதியளிக்கக் கூடிய அதிகாரி (பிரதமர்) இந்த கடிதம் முறைப்படி இல்லை என, வெளிப்படையாக கூறியிருக்கலாமே. சாமியின் கடிதம் புகார் வடிவில் இல்லை என்றால், அவருக்கு தெரிவித்து இருக்கலாம். "பிரதமர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலும், சாமியின் மனுவானது புகார் இல்லை, கடிதம் தான் என்று குறிப்பிட்டிருக்கலாம். இல்லையெனில், சாமியின் கடிதமானது பரிசீலனைக்கு உகந்தது அல்ல, அது முறையான புகார் அல்ல என்றாவது நீங்கள் கூறியிருக்கலாம். இதை ஒரே பத்தியில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கலாம். இவை எதையும் நீங்கள் செய்யவில்லை' என்றனர்.

அதேநேரத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை கண்காணிப்பதில் இருந்து சுப்ரீம் கோர்ட் விலகி இருக்க வேண்டும் எனக்கோரி, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். "இந்த ஊழல் வழக்கில் பண ரீதியான அம்சத்தை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற ஊழல் வழக்குகளை எல்லாம் இந்த வழக்கு தூக்கி சாப்பிட்டு விட்டது, சாதாரணமாக்கி விட்டது என்றே சொல்லலாம்' என நீதிபதிகள் காட்டமாகக் கூறினர். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற சி.பி.ஐ., வக்கீல் வேணுகோபால் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "நீதித்துறை தொடர்ந்து அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. மக்கள் தங்களின் குறைகளுக்கு தீர்வு காண அவர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்' என்றும் ஆவேசமாக கூறினர்.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது: நமது அரசு நிர்வாகத்தில் ஒட்டு மொத்தமாக தோல்வி என்று வரும்போது தான் நீதிமன்றம் தலையிடுகிறது. நமது பொது வாழ்க்கையின் தரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஊழல் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. ஆனால், இப்போதோ அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது நிர்வாக முறையில் உள்ள பிடிவாதமான போக்கும், அலட்சியமும் தான். மக்களுக்கு உதவ வழியில்லை என்ற போது தான் நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்தது, 2008ம் ஆண்டு. ஆனால், விலை நிர்ணயம், 2001ம் ஆண்டு அடிப்படையில். கடைசி நேரத்தில் விதி மாற்றப்பட்டுள்ளது. யாராவது தங்கள் தனிப்பட்ட சொத்தை, 2007ல் விற்கும் போது, 2001ம் ஆண்டு என்ன விலை இருந்ததோ, அந்த விலைக்கு விற்க முன்வருவார்களா? நாங்கள் ஆவணங்களை பார்த்தவகையில், சம்பந்தப்பட்ட துறை மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளது தெரிந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையை தொடர்ந்து அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.(dinamalar)

No comments:

Post a Comment