Wednesday, November 24, 2010

சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: முதல்வர் அதிரடி



""முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னையில் நேற்று நடந்த வேளாண் அலுவலர்கள் மாநாட்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தென்னகப் பகுதி, தமிழக பகுதி, வடக்கே உள்ள பகுதி ஆகியவை கலந்த ஏக இந்தியாவில் நாம் இருக்கிறோம். நாட்டின் ஒரு பகுதியில் இருப்பவரை வளர்த்து விட்டுவிட்டு, ஒரு பகுதியில் இருப்பவரை தாழ்த்தினால், அது ஏக இந்தியாவாக இருக்க முடியாது. மாநிலம், மத்திய அரசு என்பது என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. இது பேதங்கள், பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனையாளர்கள் மறந்து விடக்கூடாது. தமிழக வேளாண்துறை வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது; மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று ஒரு தாய் உரிமை கொண்டாட முடியாது; தகப்பனுக்கும் உரிமை உண்டு.

ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி இரு பெண்கள் சாலமன் என்ற மன்னனிடம் வந்தனர். யார் உண்மையான தாய் என்று விசாரித்து, அந்த மன்னன் தீர்ப்பளித்த பின்பும், அதை இருவரும் ஏற்கவில்லை. கடைசியாக, தனது வாளை எடுத்து குழந்தையை இரு துண்டாக்கி, ஆளுக்கு ஒரு பங்கு தருவதாக கூறினான். இருபெண்களில் ஒருவராக இருந்த போலித்தாய் சதி செய்ய நினைத்தாள்; ஒப்புக்கொண்டாள். அந்த குழந்தையை பெற்ற தாயோ, "என் குழந்தையாக இருந்தாலும், அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்றாள். அவளைப் பொறுத்தவரை குழந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அந்த எண்ணம்தான் நமக்கும் இருக்கிறது. மற்ற முதல்வர்கள் சொல்வது போல், மத்திய அரசு என்று நான் சொல்லவில்லை; இந்தியப் பேரரசு என்று சொல்கிறேன்; நாங்கள் சிற்றரசுதான்.

நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ராஜாவை நீக்க வேண்டும் தி.மு.க.,வுக்கு யுவராஜா கோரிக்கை: இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனை விதித்து பேசினார். அவர் பேசியதாவது: தற்போது ஆட்சி செய்யும் தி.மு.க., அரசை நான் குறை கூற விரும்பவில்லை. தி.மு.க.,வினர் கிராமத்திற்கு செல்கின்றனர். இலவச "டிவி' களை வழங்குகின்றனர். ஆனால், மக்கள் வளர்ச்சிக்காக அவர்கள் செல்லவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ராகுலுக்கும் ஆதரவு தர வேண்டும். வரும் காலத்தில் நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிப் பீடம் ஏறும்.தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ராகுல் தான் முடிவு செய்வார். அவர் வழிகாட்டும் கூட்டணி தான் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும்.

ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களை (ராஜா) தி.மு.க.,விலிருந்து விலக்கி வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஒருவேளை சோனியாவும், ராகுலும் இந்த கூட்டணி வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டும் என்றால், இதுபோல நடவடிக்கைகளை எடுத்தால் தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு யுவராஜா பேசினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்து, இந்த யோசனையை வரவேற்றனர்.

No comments:

Post a Comment