Tuesday, November 16, 2010

விபரீத விளம்பரங்கள்சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரம் இப்போது,​​ நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.
அதாவது,​​ நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும்விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில்,​​ மக்களின் மனதை -​ சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர் விளம்பர நிபுணர்கள்!​ ​
விளம்பரம் என்பது "முதலில் பார்க்க வைக்க வேண்டும்,​​ பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும்,​​ பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்'.​ இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.
ஆனால்,​​ நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன.​ பேச வைக்கின்றன,​​ ஆனால்,​​ வாங்க வைக்கின்றனவா?​ சந்தேகம்தான்.​ காரணம் பல.​ அவற்றுள் ஒன்று,​​ இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.
சம்பந்தமே இல்லாத காட்சிகள்,​​ சம்பந்தமே இல்லாத உரையாடல்கள்,​​ சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள்,​​ எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர்.​ இது ஒரு புதுவகை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.
அதிலும்,​​ குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள் இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும்,​​ இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் வெளியானது.​ அதில்,​​ படுத்திருக்கும் நிலையிலிருக்கும் பெண்ணைத் தழுவுவார் ஓர் ஆண்.​ சிறிது நேரத்தில் அந்தப் பெண் இரு சக்கர வாகனமாக மாறுவார்.​ இப்படியாக காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பான அந்த விளம்பரம்,​​ மகளிர் இயக்கத்தினர் எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு நிறுத்தப்பட்டது.
இப்போது திரையரங்குகளில் பிஎஸ்என்எல் விளம்பரம் ஒன்று திரையிடப்படுகிறது.​ ஒரு பெண் வேண்டுமென்றே போடப்பட்ட அல்லது காட்டப்பட்ட அரைகுறை ஆடைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருப்பார்.​ அருகிலுள்ள ஆணுடன் நெருக்கமாக இருப்பார்.​ திடீரென ஏதோவொன்றைச் சொல்லி அவரைத் துரத்திடுவார்.​ நின்று கொண்டிருப்பவரை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்வார்.​ காரணம் அவரிடம் "3 ஜி செல்போன்' இருக்கிறதாம்.​ எதற்காக இப்படிக் காட்ட வேண்டும்?
இதை 3 ஜி செல்போன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்று சொல்லிவிட முடியுமா?​ அல்லது 3 ஜி வைத்திருப்பவரெல்லாம் அருகிலுள்ள பெண் தன்னை விளம்பரத்தில் வருவதைப்போலவே அழைத்து நெருக்கமாக அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று கருதிக் கொண்டால் என்ன ஆவது?​ பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக மாறிவிடும்.
முன்பெல்லாம் தனியார் நிறுவனங்கள்தான் இதுபோன்ற விளம்பர உத்திகளில் களம் இறங்கின.​ இப்போது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்படி இறங்கியிருக்கிறது.
அதேபோல,​​ பிஎஸ்என்எல் விளம்பரங்கள் எதுவும் தமிழில் தயாரிக்கப்படுவதில்லை.​ எல்லாமும் ஹிந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு,​​ சில நேரங்களில் மட்டும் போனால் போகட்டுமென்று தமிழில் "டப்' செய்யப்பட்டு வெளியாகின்றன.
இத்தனைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டுக்காரர்.​ அதிலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்தவர்.​ எப்படியிருக்கிறது கூத்து?​ நல்லவேளையாக பெரியார் உயிருடன் இல்லை!
விளம்பர உத்திகள் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.​ அதேபோல,​​ அரசுத் துறை நிறுவனங்கள் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தி தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழிலை நடத்த வேண்டும்.​ அதனால் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்ல,​​ அவற்றால் நாட்டுக்கே பாதுகாப்பு,​​ பெருமை,​​ வளர்ச்சி எல்லாமும்.
அதேநேரத்தில் இதுபோன்ற கொடுமைகளை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?
இன்னொரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது.​ உடலில் பீய்ச்சிக் கொள்ளும் வாசனைத் திரவிய விளம்பரம் அது.​ அதைப் போட்டுக்கொண்டு நடக்கும் ஆணுடன் தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள்.​ இதென்ன அபத்தம்?
இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று.​ பெரும்பாலானோரிடம் கணினி,​​ மடிக்கணினி,​​ நவீன செல்போன்கள்.​ பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன,​​ இறங்குகின்றன.​ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது,​​ விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்.
பெண் விஞ்ஞானி,​​ பெண் முதல்வர்,​​ பெண் காவலர்,​​ பெண் பிரதமர்,​​ பெண் குடியரசுத் தலைவர்,​​ பெண் ஆலோசகர்...​ இருந்தென்ன பயன்?​ பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.
பொருளைப் பற்றிய விவரங்களை மக்களிடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நேர்மை,​​ விற்பனையாளர்களிடமும்,​​ விளம்பர நிபுணர்களிடம் அற்றுப் போயிருக்கிறது என்பது புரிகிறது.​ ​ ஆனால்,​​ இதையும் தாண்டி பொதுவாக எவற்றையெல்லாம் தாமாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அடிப்படைத் தரமும்கூட ஆளுவோரிடம் குறைந்திருக்கிறது என்பதை என்னவென்று சொல்ல?(dinamani)

No comments:

Post a Comment