Tuesday, November 16, 2010

ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்படும் செய்திகள் தினமும் வருகின்றன. ஆனால், ஊழல் புரிந்ததாகப் புகார் கூறப்படுபவர்கள் யாரும் கைதுசெய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை.
 லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன்.
  பதில் தெரியாமல் விழித்ததைப் பார்த்து, "சிறிய அளவில் வாங்கினால் அது லஞ்சம், அதுவே பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் சுருட்டினால், ஊழல். அப்படித்தானே' என அவனே பதிலும் சொன்னான். அது சரியாகவேபட்டது.
  பத்திரிகைகளில் "லஞ்சப் புகார்-இன்றைய கைது நிலவரம்' எனத் தலைப்பிட்டே செய்தி வெளியிடலாம் என்ற அளவுக்கு அந்தப் புகாரில் கைதாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
  பயணப்படி, மருத்துவப்படி, பஞ்சப்படி எனப் பலவகையாக அரசு படியளந்த போதிலும் தாங்கள் சொன்னபடி கையில் லஞ்சம் வைத்தால்தான் பொதுமக்களின் பணிகளை நிறைவேற்றுவது என இவர்கள் தீர்மானித்துக் கொண்டனரோ என நினைக்க வைக்கிறது. இத்தகைய அதிகாரிகளால், நேர்மையான முறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தலைக்குனிவுதான்.
  மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார்.
அதில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தியைக் குறிப்பிட்டு அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாராம்.
 ராஜாஜி எழுதிய பதில் கடிதத்திலோ, அந்த ஆட்சியரை தன்னால் மாற்ற இயலாது என எழுதியிருந்தாராம். படித்த நண்பருக்கு அதிர்ச்சி. ஆனால் கடிதத்தில் இருந்த வரிகளைத் தொடர்ந்து படித்தபோது நண்பருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் மேலிட்டன.
  ""ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்ற விரும்பில்லை. அந்த ஆட்சியர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரங்கள் அனுப்புங்கள். அவரை சிறைக்கே அனுப்புவோம்'' என எழுதப்பட்டிருந்ததாம்.
  இன்றைக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினால்கூட அவற்றைக் கண்டு சம்பந்தப்பட்டோர் அதிர்ச்சிக்குள்ளாவதில்லை. ஆதாரம் கிடக்கட்டும், ஊழலில் கிடைத்த தொகை சேதாரம் இல்லாமல் சேருமிடம் சேர்ந்ததா என்பதும், அதன் மூலம் தங்களின் பொருளாதாராமும், தங்கள் கட்சிகளின் பொருளாதாரமும் மேம்பட்டனவா என்பதும் மட்டுமே அவர்களின் கவலை.
  லஞ்சமோ, ஊழலோ இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவைதான். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என லஞ்சம் வாங்குவோர் கையும் லஞ்சமுமாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் நிலையும், அவர்கள் மீதான வழக்குகளின் நிலைமையும் என்னாகிறது என்பது தனிக்கதை.
  ஆனால், கோடிகளில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுபவர்கள் மீதோ நடவடிக்கை என்பது சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக அவர்களுக்கு எப்போதும் ராஜமரியாதைதான்.
அத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவி வகிக்கும் அரசோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையோ அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் "ஊழலை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்' என்பதுபோன்ற அறிக்கைகள் விடுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன.
  அண்மைக்கால ஊழல் தொகைகள் சாமானிய மக்களை "ஆ' என வாய் பிளக்கவைக்கும் விதத்தில் உள்ளன. லட்சம், கோடிகளில் என்பதையெல்லாம் தாண்டி ஊழல் இன்று லட்சம் கோடிகளில் நடைபெறுகிறது. நடக்கும் ஊழல் கோடிகளில்; நடவடிக்கை மட்டும் பூஜ்யம்.
  "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற பழமொழியை மாற்றி "இருக்கும் பதவியில் சுருட்டியது வரை லாபம்" எனச் சொல்லலாம் என்ற அளவுக்கு நாட்டில் பல துறைகளிலும் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது.   விமானத்தைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படுகிறது. ஊழலும் ஒருவகையில் கடத்தல்தான். உண்ண ஒருபிடிச் சோறும், உடுக்க ஒரு முழத் துணியும் இல்லாத லட்சக்கணக்கானோர் வாழும் நாட்டில், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை, பொதுமக்களின் சொத்துகளைக் "கடத்துவதே' ஊழல். அதில் கிடைத்தத் தொகையை தங்கள் வளைகளுக்குள் சேர்த்துவைத்துக் கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம்.
  ராஜிநாமாக்கள் கண்துடைப்பாகவும், விசாரணைகள் காலம் கடத்த மட்டுமே உதவுவதாகவும் ஆகிவிடக் கூடாது. முறையான விசாரணை, பாரபட்சமற்ற அணுகுமுறை, அரசியல் தலையீடின்மை போன்றவற்றால் நீதி விரைவில் நிலைநாட்டப்படுவதே முக்கியம்.
 கிராமப்புறத்தில் அதிகம் படிக்காதோர் ஜீரோவை முட்டை என்பர். இன்றைக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களில் உள்ள தொகைகளுக்கு எத்தனை முட்டை என்பதைவிடவும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ வாரத்துக்கு ஐந்து முட்டை கிடைத்ததா என்பதே சராசரி குடிமகனின் கவலையாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இரண்டு முட்டைகூட கிடைத்தாலும் அவனுக்கு அந்த அளவில் மகிழ்ச்சிதான்!
  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்றார் அய்யன் திருவள்ளுவர். இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார்: "ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!'(dinamani)

No comments:

Post a Comment