Tuesday, November 16, 2010

பிறப்பிலேயே இரு கைகளும் இல்லை : சாதிக்க தன்னம்பிக்கை குறையவில்லை

 

இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான  அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.


மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை  இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.
மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார்.

இது குறித்து பரமேஸ்வரி கூறியதாவது: "ஊனம் என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக இருக்க கூடாது. ஊனமாக பிறந்துவிட்டோமே என்று கவலைப்படாமல், மனத் தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல், நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதே போல் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனமான செயல். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தனித் திறமை உள்ளது. அதை தைரியத்துடன் செயல்படுத்தினால், நினைத்ததை சாதித்து காட்டலாம்.எனக்கு இரு கைகள் இல்லை என்றாலும், அனைத்து வேலைகளையும் நானே செய்துக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது. ஆகையால், தமிழக அரசு எனக்கு கடை வைப்பதற்கு நிதியுதவி வழங்கினால், நான் கடை வைத்து அதில் திறம்பட வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறி காட்டுவேன்.இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.

இரு கைகளும், ஆரோக்கியமும்,  வாய்ப்பும், வசதிகளும் இருந்தும் சோம்பேறிகளாக சுற்றி வருபவர்கள் இடையே, இரு கைகளும் இல்லாமல் வாழ்க்கையில் போராடிவரும் பெண்ணை பார்த்து அப்பகுதி மக்கள் வியக்கின்றனர்(dinamalar)

No comments:

Post a Comment