Friday, November 19, 2010

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்


ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...


முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...

இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.

வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.

மதுரை கே.கே.நகர் "ராயல் டச்' ஆண்கள் பியூட்டி பார்லர் உரிமையாளர் ராஜன் கூறுகிறார்: ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.

என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.

"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.

ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்: ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.

இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது: ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.

அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.

மதுரை மனநல நிபுணர் டாக்டர் சி.ராமசுப்ரமணியம் இதுப்பற்றி கூறியதாவது: ஆண்களே வெளியில் அதிகம் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்கின்றனர். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் ஆண்களிடமே அதிகம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத, நிறைவேற்ற இயலாதபோது தற்கொலை நிகழும் வாய்ப்பு அதிகம். எத்தனை தான் ஆண், பெண் சமம் என்று கூறி வந்தாலும், அது இன்னமும் வரவில்லை. அது வரும்வரை இந்நிலை இருக்கவே செய்யும். பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல் நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மது, போதை பழக்கங்களுக்கு ஆட்படுவதால், அதுவே பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment