Sunday, November 28, 2010

கூட்டணியை துண்டிக்க நினைத்தால் காங்கிரசுக்கே நஷ்டம்: கருணாநிதி



 "தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் துண்டிக்க நினைத்தால், அவர்களுக்கே நஷ்டம்' என, வேலூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் காந்தி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

முதல்வர் கருணாநிதி பேசியதாவது
:தி.மு.க., முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்மை விட்டு விலகிச் சென்றன. தி.மு.க., எந்த குற்றம் செய்ததற்காக கம்யூனிஸ்ட்கள் எங்களை விட்டு விலகினார்கள், என சொன்னால், நாங்களே விலகிக் கொள்வோம்."அணு ஆயுத ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்து இடுகிறது, எனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிட வேண்டும்' என, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என்னிடம் கூறினர். அதை ஏற்க நாங்கள் மறுத்து விட்டோம்.தி.மு.க.,வை அழிக்க சில கட்சிகள் நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மத்திய அரசுக்கு உறுதுணையாக மாநில அரசும், மாநில அரசுக்கு உறுதுணையாக மத்திய அரசும் இருந்து வருகிறது. இதை காங்கிரஸ் கட்சியில் சிலர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில காங்கிரஸ்காரர்கள் தி.மு.க., தலைமையை ஏற்கவில்லை. டில்லி காங்கிரஸ் தலைமை இதை கண்டிப்பதும் இல்லை. டில்லி தலைவர்கள் எங்கள் உறவை துண்டித்தால், துண்டிக்கப்படுபவர்களுக்கே நஷ்டம்.

காங்கிரஸ், - தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது.இப்போது "ஸ்பெக்ட்ரம்' என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்.

முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வேலு, பன்னீர்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.(dinamalar) 

No comments:

Post a Comment