Sunday, November 28, 2010

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு


பத்திரிகை விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்று எதற்குமே அசைந்து கொடுக்காத மத்திய அரசை, உச்ச நீதிமன்றமும், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கையும் "ஸ்பெக்ட்ரம்' ஊழலை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மையம் தொடுத்திருக்கும் வழக்கில் நடைபெறும் விசாரணை மேலும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறதோ இல்லையோ, இந்தியாவில் விழிப்புடன் செயல்படும் பத்திரிகைகளும், துணிவுடன் இயங்கும் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம், நீதித்துறை, தலைமைத் தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகள் ஒன்று மாற்றி ஒன்று துரத்தும் என்பது மட்டும் இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
""தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் என்பது அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பு தாக்கல் செய்யும் அறிக்கைகளுக்கு அதிகபட்ச மரியாதை தரப்பட வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் தனது அறிக்கையில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும்போது, மத்திய புலனாய்வுத் துறை நியாயமாகப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சரையும், அந்தத் துறையின் செயலரையும் விசாரித்திருக்க வேண்டும். 8,000-க்கும் அதிகமான தஸ்தாவேஜுகளைப் பரிசோதித்திருக்கிறோம் என்கிறீர்கள். முதல்நோக்கில் (பிரைமா ஃபேசி) சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தெரிந்தும் ஏன் இன்னும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று மத்திய புலனாய்வுத் துறைக்குக் கேள்வி எழுப்பி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தில் வெளிவரும் தகவல்களிலிருந்தும், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையரின் அறிக்கையின்படியும் பார்த்தால் திட்டமிட்டுப் பல முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை உரிமம் வழங்குவதற்கான வழிமுறைகளில் பல அடிப்படை நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 25, 2007-க்கு முன்னால் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 85 விண்ணப்பங்கள் ஏதாவது ஒரு வகையில் இந்த அடிப்படை நிபந்தனைக்கு உள்பட்டதாக இல்லை என்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது உச்ச நீதிமன்ற விவாதத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
விண்ணப்பம் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த 15 நாள் அவகாசத்தை அரை நாளாகக் குறைக்கிறார்கள். 13 விண்ணப்பதாரர்களுக்கு இது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அவர்கள், விண்ணப்பத்துடன் இணைப்பதற்கான வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்)யுடனும் வங்கி உத்தரவாதத்துடனும் தயாராகக் காத்திருக்கிறார்கள். முன்கூட்டியே தெரியாமல் அரை நாள் அவகாசத்தில் இவர்களால் எப்படி வரைவோலை, வங்கி உத்தரவாதம், தொடர்பான எல்லா ஆவணங்களுடனும் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடிந்தது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் தனது அறிக்கையில் எழுப்பி இருக்கும் கேள்வியும் உச்ச நீதிமன்ற விவாதத்தில் வெளிவந்திருக்கிறது.
மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, தலைமைக் கணக்குத் தணிக்கை முறையாகச் செய்யப்படுகிறது. இந்தத் துறையின் சார்பில் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் ஆண்டுதோறும் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அதில் முறைகேடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தத் தவறுகளைச் சம்பந்தப்பட்ட அரசின் நிதியமைச்சகம் ஆய்வுசெய்து, தவறுகளைத் திருத்தவும், தவறு செய்தவர்களைத் தண்டிக்கவும் நடவடிக்கைகளைத் தொடரவேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம்.
இந்த ஆணையம் சுதந்திரமாக, எந்தவித அரசியல் நிர்பந்தங்களுக்கும் உள்படாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டம், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையருக்குப் பல சிறப்புச் சலுகைகளை வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம் போன்று இதுவும் பிரதமர் அல்லது முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்காத அமைப்பு.
பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1860-ல் தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் தொடங்கப்பட்டுவிட்டது. மக்களின் வரிப்பணம் ஆட்சியாளர்களால் சரியாகச் செலவிடப்படுகிறதா, அதில் ஊழல் அல்லது முறைகேடுகள் உள்ளனவா என்பதைத் தணிக்கை செய்வதுதான் இதன் கடமை. பலமுறை, இந்தியத் தலைமைத் தணிக்கை ஆணையத்தின் சட்டதிட்டங்கள் நாடாளுமன்றத்தால், அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது 1971-ல் செய்யப்பட்ட கடைசித் திருத்தத்தின் மூலம் நடைமுறையில் உள்ள அதிகாரங்களும், கடமைகளும்.
தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர் என்னதான் அறிக்கைகள் தாக்கல் செய்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. முறைகேடுகள் அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தால் ஆட்சியாளர்கள் அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் கட்டளைக்குப் பணிந்து அதிகாரிகள் முறைகேடுகளுக்குத் துணைபோகும்போது, தங்களது முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படும் என்பதால், தேவைப்படும் தகவல்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் கணக்குத் தணிக்கை ஆணையத்துக்குத் தருவதில்லை. ஆணையத்துடன் ஒத்துழைப்பதும் இல்லை. பொதுமக்களுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தரும் அதிகாரம்கூட, கணக்குத் தணிக்கை ஆணையத்துக்கு இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. இதையெல்லாம் மீறி, கணக்குத் தணிக்கை ஆணையம் திறமையாகச் செயல்பட்டு, முறைகேடுகளை வெளிக்கொணர்கிறது என்றால் அதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
அது கணக்குத் தணிக்கை ஆணையமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், தகவல் ஆணையமாக இருந்தாலும், இந்த ஆணையர்களுக்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, கணக்குத் தணிக்கை ஆணையத்தின் அதிகார வரம்பு உயர்த்தப்பட்டு, நேரிடையாக விசாரணைக்கு உத்தரவிடவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சட்டரீதியாகத் தலைமை ஆணையரின் கரங்கள் வலுப்படுத்தப்படுவதுதான், ஊழலில் மூழ்கித் திளைக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்குப் போடப்படும் சரியான மூக்கணாங்கயிறாக இருக்கும்!

No comments:

Post a Comment