Friday, November 19, 2010

ஊழல், பேராசை பெரும் அபாயங்கள் : சோனியா பேச்சு

 "நாட்டில் ஊழலும், பேராசையும் அதிகரிப்பது பெரும் அபாயங்கள்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார். டில்லியில் நடைபெற்ற இந்திரா நினைவு கருத்தரங்க விழாவில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

இந்திய வளர்ச்சி, சமூக சூழலில் ஜனநாயகம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் கூறியதாவது:
ஊழலும், பேராசையும் அதிகரிக்கிறது. இது, சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு அபாயமானது. இப்போக்கைத் தடுக்க மேலும் திறமையான, செயல்படுவதில் ஊக்கமிக்க அரசு அவசியம். பொதுவாக நாட்டில் மொத்த வளர்ச்சி அதிகரித்தது என்பது மட்டும் எல்லா விஷயங்களுக்கும் தீர்வாகாது. அதே சமயம், நமது தார்மீக வட்டம் சுருங்குவது நல்லதல்ல. பொதுமக்களுக்கு ஆற்றப்படும் சேவையானது எந்த அளவு மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதில் இடைவெளி வரக்கூடாது. சொன்னதை செய்யும் மனசாட்சி எல்லா துறையிலும், எல்லா மட்டத்திலும் வர வேண்டும். எந்த அடிப்படையில் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான நோக்கம் அமைய வேண்டும். நாம் நடத்தும் நிர்வாகம் நியாயமாக இருக்கிறது என்ற கருத்து, பொதுமக்களிடம் பரவலாக வர வேண்டும்.

நிதி நிர்வாக விஷயங்களில் ஒளிவு மறைவற்ற தன்மை, மக்களுக்கு ஆற்றும் சேவைகளில் நேர்மை இருக்க வேண்டும். சமூக ஜனநாயகம் என்பது வெறும் கவர்ச்சி கோஷம் அல்ல. நமது அரசமைப்பு சட்டம் என்ன கூறுகிறதோ அதை நிறைவேற்றுவதின் மூலமே அதை அடைய முடியும். முன்பை விட நாம் அதிக கோடீஸ்வரர்களை உருவாக்கும் போது, அதே சமயம் இருவேளை உணவுக்கு வழியின்றி பலர் வாடுகின்றனர் என்பதை மறக்கக்கூடாது. சமுதாயத்தில் அபலைகளாக, பாதுகாப்பு இல்லாதவர்களாக உள்ள மக்களுக்கு உதவுவதே நிர்வாகத்தின் லட்சியமாகும். இவ்வாறு சோனியா பேசினார்.(dinamalar)

No comments:

Post a Comment