Friday, November 19, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் இனி ஆஜர்

 
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், பிரதமர் சார்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி வாதிடுவார் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கடிதம் எழுதினார். இதற்கு பிரதமர் அலுவலகம் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால், ராஜா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் சாமி. இந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "சாமியின் கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதா? இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படாமல் மவுனம் காத்தது ஏன்? என, அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் இந்த வழக்கு நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ""2 ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் தாக்கல் செய்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையைப் பார்க்கும் போது, அது மிகவும் சீரியசான விவகாரம் என்பது தெளிவாகிறது.

இந்தப் பிரச்னை தொடர்பாக இதுவரை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம் சார்பாக சனிக்கிழமை (இன்று) பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பிரதமர் அலுவலகத்திற்கும், சுப்ரமணியசாமிக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றம் தொடர்பான விவரங்களையும், இந்தப் பிரச்னை தொடர்பான முழு விவரங்களையும் ஆவணங்களாக சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, பிரதமர் சார்பில் மத்திய அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி வாதிடுவார் என மத்திய அரசு அறிவித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தததிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தான், மத்திய அரசு சார்பிலும், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பிலும் ஆஜராகிவந்தார். பிரதமர் அலுவலகம் மீது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளதை தொடர்ந்து, தன் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைக்க, அட்டர்னி ஜெனரலே வாதிட பிரதமர் விரும்பியதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சொலிசிட்டர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் கூறுகையில், "இதை மாற்றம் என்று சொல்ல முடியாது. சிறந்த ஒருங்கிணைப்பிற்காக செய்யப்பட்ட ஏற்பாடு. நான் தொடர்ந்து மத்திய அரசு சார்பிலும், தகவல் தொடர்புத் துறை சார்பிலும் வாதிடுவேன். அட்டர்னி ஜெனரல் பிரதமருக்காக வாதிடுவார்' என்றார். வழக்கு தொடர்பாக சிறப்பு உத்தரவு ஏதும் தங்களுக்கு வந்துள்ளதா என்று ஆடிட்டர் ஜெனரல் வாகன்வதியிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். மனுதாரர் சுப்ரமணியசாமி சார்பில் பிரசாந்த் பூஷண் வாதிட்டு வருகிறார்.

சாமி கருத்து: "பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வாதிடுவது பற்றி நான் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன்' என, சுப்ரமணியசாமி கூறினார். மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஸ் திவாரி, பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்காதது தொடர்பாக கீழ்கோர்ட்டிலோ வேறு எந்த கோர்ட்டிலோ ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார். இந்த கேள்வியை அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஏன் கேட்கவில்லை. இது குறித்து நீதிபதிகளும் கேட்கவில்லை. திவாரிக்கு சட்டம் பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்' என்றார்.

மொய்லி கருத்து: "வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, பிரதமர் சார்பில் வழக்கில் ஆஜராவார். சொலிசிட்டர் ஜெனரல் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்திற்காகவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் சி.பி.ஐ.,க்காகவும் ஆஜராகின்றனர்' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.(dinamalar)

No comments:

Post a Comment