Friday, November 19, 2010

கார்த்தி அணிக்கு கலக்கம்: வாசன் அணிக்கு உற்சாகம்

இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டி தமிழகப் பொறுப்பாளர்
பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளராக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவரத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றம் வாசன் அணியினருக்கு உற்சாகத்தையும் கார்த்தி சிதம்பரம் அணிக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளதாம்.
இளைஞர் காங்கிரஸ் பாத யாத்திரை தொடங்கிய களியக்காவிளையில் இருந்து வாசன் அணியினரும் கார்த்தி சிதம்பரம் அணியினரும் மோதிக் கொள்வது அன்றாட வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் பாத யாத்திரை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு வந்தபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாசன் ஆதரவாளரான இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் பிரபு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதனை மறுத்த மாநிலத் தலைவர் யுவராஜா, யாரும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிடத்தை கேட்டுக் கொண்டார்.
அதோடு தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரான கிரண்குமார் ரெட்டி ஒரு தரப்பினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக வாசன் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கிரண்குமார் ரெட்டி நீக்கப்பட்டு பிரியவரத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங்கின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. அவருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்ததே. திமிர் பிடித்த அறிஜீவி என்று பகிரங்கமாக சிதம்பரத்தை விமர்சித்தவர் திக்விஜய்.
இந்த மாற்றத்தால் வாசன் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகள் ராகுல் காந்தியை முழுமையாகச்  சென்றடையும். எங்களின் உழைப்புக்கு மரியாதை கிடைக்கும் என்கிறார் வாசன் ஆதரவாளரான மாநிலத் தலைவர் யுவராஜா.
நவம்பர் 24-ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பாத யாத்திரை நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வருவார் என்ற நம்பிக்கையில் இளைஞர் காங்கிரஸôர் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment