Friday, November 19, 2010

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குத் தயார்: முதல்வர் கருணாநிதி

 
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்குத் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். விசாரணையை ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

   நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதற்கு நான் அஞ்சுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அலைக்கற்றை பிரச்னையில் மத்திய அமைச்சராக இருந்த ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, மத்திய அரசை தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி வேறு சில கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து ஆதரிக்கத் தான் ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாக தானாகவே முன்வந்து அறிக்கை விடுத்தார் ஜெயலலிதா.
   இப்படிச் சொன்னாரே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டுமென்று முதலில் கோரவில்லை. ஜெயலலிதாவின் முகத்தில் கரியைப்  பூசுகின்ற அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் "தானாகவே ஆதரவு தருகிறேன்' என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
   ஜெயலலிதா முதலில் சொன்னதெல்லாம் ராசா மீது பிரதமர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அவருடைய விருப்பம் நிறைவேறாத அளவுக்கு, திமுக தானாகவே முன்வந்து நாடாளுமன்றம் கூச்சல் குழப்பம் இன்றி ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டும்; மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு அமைச்சர் ராசாவை பதவி விலகச் செய்தது.
வேண்டாம் எனக் கூறவில்லை: ராஜிநாமாவுக்குப் பிறகும் மத்திய அரசுக்கு பிரச்னை கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் போர்க்குரல் எழுப்பி பாஜக போன்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து கொண்டு அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜெயலலிதா எழுப்பத் தொடங்கினார். திமுக சார்பில் அந்தப் பிரச்னையில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதே தவிர, திமுகவைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை வேண்டாமென்று சொல்லவே இல்லை.
சிண்டு முடிகிறார்: ஆளுங்கட்சியின் சார்பில் உள்ளவர் தலைமையிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக் குழு முறைப்படி அமைக்கப்பட்டால், பின்னர் அதைப் பற்றியும் எதிர்க்கட்சிகள் குறை கூறலாம் என்ற எண்ணத்தோடுதான் எதிர்க்கட்சியினருக்கு பாஜகவைச் சேர்ந்தவரும், பொது கணக்குக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்று நான் கேட்டிருந்தேன்.
  இதையொட்டி, காங்கிரஸ் கட்சி மீது எனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பி, வழக்கம்போன்று ""சிண்டு முடியும்'' பணியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
  காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.(dinamalar)

No comments:

Post a Comment