Saturday, November 20, 2010

தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் அணி: டி. ராஜா




          தி.மு.க. - காங்கிரஸ் அணி என்பது ஊழல் அணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா சாடியுள்ளார்.
 இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று ஜெயலலிதா கூறியதை நாங்கள் தேர்தல் தந்திரமாகப் பார்க்கவில்லை.  தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதி என்பதை மதுரை வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் தவிர வேறு புதிய கட்சிகளுக்கு இடமில்லை என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் கூறியுள்ளார்.
எனவே, தி.மு.க. - காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்பதும், ஊழல், முறைகேடுகளில் அவ்விரு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படுகின்றன என்பதும்தான் இப்போதைய நிலை.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, மக்கள் பிரச்னைகளுக்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து போராடுகிறோம். இப்போது ஊழலுக்கு எதிராக சேர்ந்து போராடுகிறோம்.
 தமிழக சட்டப்பேரவை தேர்தலைப் பொருத்தவரை, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. தேர்தலில் எத்தகைய உத்தியை கையாள்வது என்பது குறித்து எங்கள் கட்சி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.  எனினும், யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதைவிட, யாருடன் சேரக் கூடாது என்பதுதான் இப்போது முக்கியம். தி.மு.க. - காங்கிரஸ் அணி என்பது ஊழல் அணி. அந்த அணியுடன் எப்படி கூட்டணி சேர முடியும்.
ஆளும் கூட்டணியே காரணம்: நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால்,  இப்போது நாடாளுமன்றம் முடங்கியிருப்பதற்கு ஆளும் கூட்டணிதான் காரணம்.
 போபர்ஸ் ஊழல், பங்குச் சந்தை ஊழல் ஆகியன குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் நிதித் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 அந்த வகையில் | 1 லட்சத்து 70 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் சாதாரணமானது அல்ல. எனவேதான், இந்த ஊழல் குறித்தும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
 இந்தப் பிரச்னை தொடர்பாக கடந்த வாரம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட்டினார். அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அவர், பிரதமருடன் விவாதித்த பின் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதாகக் கூறிச் சென்றார். ஆனால், இதுவரை பிரதமரின் கருத்து என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.
 அதேபோல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒவ்வொரு முடிவும் பிரதமரின் ஒப்புதல்படியே நடந்தது என்று அப்போது அமைச்சராக இருந்த ஆ. ராசா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இது பற்றி பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நாட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டியது பிரதமரின் கடமை.
அரசியல் தீர்வு: இலங்கையில் தமிழ் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் ராணுவத்தினர்  குடியேற்றப்படுகின்றனர். தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கான எந்த பணிகளும்  நடைபெறவில்லை.
 இரண்டாவது முறையாக இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ராஜபட்ச,  இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் பேச மறுக்கிறார். தமிழ் மக்களின் வாழ்வு இவ்வளவு மோசமானதற்கு இந்திய அரசு, இலங்கைக்கு செய்த உதவிகளே காரணம் என்றார் டி. ராஜா(dinamani)

No comments:

Post a Comment