மத்திய அமைச்சர் ராஜா விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாளை பார்லிமென்ட் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பும் என்பதால், அதற்கு முன் முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா காரணமாக இருந்துள்ளார்' என, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பார்லிமென்டில் புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அதிரடியாக தலையிட்டு,"ராஜாவை நீக்க வேண்டும். இதன் காரணமாக, மத்திய அரசுக்கு ஆபத்து வந்தால், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார்' என, தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் ராஜாவோ, "எனக்கு முன்னால் பதவி வகித்தவர்கள் பின்பற்றிய நடைமுறையைத் தான், நானும் பின்பற்றினேன். எந்த முறைகேடும் நடக்கவில்லை. எனவே, நான் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக முதல்வர் கருணாநிதியும், ராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். சியோலில் இருந்து நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங்,"ஜெயலலிதா கூறிய கருத்தை தற்போது தான் கேள்விப் படுகிறேன். அவரது கருத்துக்கு காங்கிரஸ் மேலிடம் தான், கருத்து தெரிவிக்க வேண்டும்' என்றார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பிரதமர் மவுனமாக இருப்பது, பா.ஜ.,வுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், வாய் திறக்க மறுப்பது ஆச்சர்யமாக உள்ளது. அவர் மீதான மிஸ்டர் கிளீன் இமேஜ், வெறும் கண்துடைப்பு தானா' என்றார். இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நாளை மீண்டும் துவங்குகிறது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மீண்டும் எழுப்பி, இரு சபைகளையும் முடங்க வைப்பதற்கு பா.ஜ., - அ.தி.மு.க., மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ராஜா விவகாரம் குறித்து, பிரதமர் உறுதியான பதில் எதுவும் கூறாததால், பிரதமருக்கு எதிராகவும் தங்களது எதிர்ப்பை, பார்லிமென்டில் தெரிவிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவும் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சி.பி.ஐ., சரியாக செயல்படவில்லை என கூறி, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். எனவே, நாளை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, சுப்ரீம் கோர்ட்டின் கோபத்தை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசு கருதுகிறது. எனவே, சுப்ரீம் கோர்ட் பிரச்னையை கவனத்தில் கொண்டும், எதிர்க்கட்சிகளின் அமளிகளை சமாளிக்கும் வகையிலும், நாளை பார்லிமென்ட் கூடும் முன், அமைச்சர் ராஜா விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் முக்கிய முடிவை எடுக்கும் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையின் முடிவில், முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நான் குற்றமற்றவன்: அமைச்சர் ராஜா: "ஸ்பெக்ட்ரம் பிரச்னையில், என்மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் ஜனாதிபதிக்கு ஏராளமான தந்திகள் அனுப்பி, அரசுக்கு வருவாய் ஏற்படுத்திக் கொடுத்த ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., - பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு 8.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் ராஜா, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நான் ராஜினாமா செய்யமாட்டேன். இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் என்னென்ன முறைகள் பின்பற்றப்பட்டனவோ அவையே பின்பற்றப்பட்டன. இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட்டது. தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்பதை நிரூபிக்க என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்பதை பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் என்னால் நிரூபிக்க முடியும். விரைவில் நான் குற்றமற்றவன் என்பதை தெளிவுபடுத்துவேன். ஸ்பெக்ட்ரம் விஷயத்தில், ஜனாதிபதிக்கு ஏராளமான தந்திகள் அனுப்பி, மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி மாறுமா? காங்கிரஸ் மழுப்பல்: "தற்போது எங்கள் கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தற்போது கூறுவது மிகவும் கடினமானது' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம்,"காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியதை காங்கிரஸ் நிராகரிக்குமா, ஏற்றுக் கொள்ளுமா' என, செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது எங்கள் கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தற்போது கூறுவது மிகவும் கடினமானது. அமைச்சர் ராஜா பதவி விலகுவாரா இல்லையா என்பதை பிரதமர் அல்லது தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கை, இன்னும் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படவில்லை. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின், அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்(dinamalar)
No comments:
Post a Comment