Monday, November 15, 2010

ஊனம் ஒரு தடையல்ல!




பார்வை குறைபாடு ஒரு சவால்!"ஏஸ் பனேசியா சாப்ட் ஸ்கில்ஸ்' இளங்கோ: நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. என் அம்மா, தன் தாய்மாமாவையே மணந்தார். நெருங்கிய உறவுக்குள் நடந்த திருமணத்தின் பாதிப்பால், எனக்கு பிறக்கும்போதே பார்வை இல்லை. 10ம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்தேன்.  பிளஸ் 1 முதல், பொதுப் பள்ளியில் சேர்ந்து, மற்ற மாணவர்களுடன் போட்டி போடத் துவங்கினேன்.லயோலாவில் பி.ஏ., ஆங்கிலத்தில் கோல்ட் மெடல். எம்.ஏ., ஒலியியல் பாடத்தில் மீண்டும் தங்கம். ஆங்கிலத்தை எவ்வாறு கற்றுத்தருவது என, ஆசிரியர்களுக்கு உணர்த்தும் வகையில் நான் செய்த ஆராய்ச்சி கட்டுரை இன்றும் பேசப்படுகிறது.கல்லூரி விரிவுரையாளருக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத் துறை பேராசிரியராக பணியாற்றினேன். பின், சென்னை பல்கலையில் பகுதி நேர விரிவுரையாளர் பணி செய்தேன். பல நிறுவனங்களில் இருந்தும் பணிபுரிய அழைப்பு வந்தது. கொஞ்சம் யோசித்து, "ஏஸ் பனேசியா சாப்ட் ஸ்கில்ஸ்' என்று ஒரு நிறுவனம் தொடங்கினேன். வாழ்வியல் திறன்களை மேம்படுத்துதல், இலக்கை நிர்ணயித்தல், ஆளுமைத் திறன் வளர்த்தல் போன்ற துறைகளில், தமிழகம் தாண்டியும் பல்வேறு நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். உலகிலேயே மிக எளிமையாக கற்றுக்கொள்ளக் கூடிய மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இலக்கணம் என்ற பெயரில், மாணவர்களை மிரள வைக்கக் கூடாது என்பதுதான் என் பாலிசி.தவறோ, சரியோ, முதலில் அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்வேன். தவறாகவே இருந்தாலும் பேசுங்கள்; பேசப் பேசத்தான் தெளிவு வரும். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறேன். கணிப்பொறியையும் கச்சிதமாக இயக்குவேன்.அடுத்து விளம்பரங்கள், டாகுமென்ட்ரி பிலிம்கள் என பல வீடியோ, ஆடியோ ஆல்பங்களுக்கு வாய்ஸ் கொடுத்து வருகிறேன். பார்வை எனக்கு சவால் தானே தவிர, சங்கடம் இல்லை.

No comments:

Post a Comment