Tuesday, November 2, 2010

சேனல் வெச்சிருந்தாதான் படங்களை வெளியிட முடியுமா?

     



என்னை ஈக்காட்டுத்தாங்கல் வீடு. ஆள் அரவமற்ற சூழல். போன் எடுத்து ஒரு ரிங்... கொடுத்தால் வாசலில் வந்து அழைக்கிறார் தங்கர்பச்சான். ""வெவசாயம் போல சினிமாவும் நலிஞ்சு போச்சு.

பம்பு செட்டு வெச்சிருக்கவன்தான் வெவசாயம் செய்ய முடியும்ங்ற நிலை வந்துட்டு. சினிமாவையும் சேனல் வெச்சிருந்தாதான் ரிலீஸ் செய்ய முடியும் போல.  இப்படி ஒரு சூழலில்தான் சினிமா இருக்கு. நல்லது நடக்கும்ன்னு எத்தனை நாள்தான் காத்திருப்பது.'' வார்த்தைக்கு வார்த்தை கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார்.

"களவாடிய பொழுதுகள்' என்னாச்சு?

எதார்த்த படங்களுக்கு அழகிதான் முன் நிற்குதுன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனால் அந்தப் படத்தை காதல் படமாக பார்ப்பதில் எனக்கு திருப்தி இல்லை. விதவைத் தாயின் காதல்ன்னு அதை வித்தியாசப்படுத்தி பார்க்கணும்னு ஆசை இருக்கு. என் எல்லா படங்களும் சமூக சிக்கல்களைத்தான் பேசியிருக்கு.

இதிலும் சமூக சிக்கலைத்தான் மையப்படுத்தி இருக்கேன். காதல் இங்கு முக்கிய பிரச்னையாக இருக்கு. பாலியல் சிக்கல்கள் எங்கும் புரையோடிக் கிடக்கு. திருட்டுத்தனமா எதையும் செய்து கொள். வெளிப்படையில் நல்லவனா இரு. இதுதான் நம் சமூகமாக இருக்கு. எல்லோரும் போலிகளாக அலையுறோம். சினிமாக்களும் காதலோட எல்லாத்தையும் பதிவு செஞ்சுருக்கான்னு தெரியல.

திருமணத்தை முடித்து வெச்சுதான் சினிமாக்கள் எல்லாம் சுபம் போட்டிருக்கு. திருமணத்துக்குப் பின்தான் வாழ்க்கையே இருக்குன்னு சொல்லப் போறேன். இந்தப் படத்தை விட்டு யாரும் கடந்து செல்ல முடியாது. ஏன்னா இது ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் நடந்துக்கிட்டு இருக்கு. நடக்கப் போகுது. படத்தை முடிச்சிட்டுட்டேன். ரிலீஸ் தேதியை நான் முடிவு செய்ய முடியாது.  

நல்ல படங்களுக்குத் தியேட்டர் இல்லை. ஒச்சாயி பெயருக்கு வரி விலக்கு இல்லை. தமிழ் சினிமா தள்ளாடுதே?

"களவாடியப் பொழுதுகள்' படம் முடிஞ்சி 9 மாசம் ஆயிடுச்சு. மிஷ்கின் படம் முடிஞ்சி 2 வருஷம் ஆயிடுச்சு. இப்போ சினிமா யாரு கையில இருக்குன்னு உங்களுக்கே தெரியும். சேனல் ஆதரவு இல்லாம இனி யாரும் சினிமாவை வெளியிட முடியாது.

அப்படி வெளியிட்டாலும் போட்ட காசுல பாதி கூட கைக்கு வராத நிலை இருக்கு. ஒவ்வொரு தயாரிப்பாளரும் இனி சேனல் வெச்சிருந்தாதான் படங்களை வெளியிட முடியும்னு தெரியுது.

இப்படியிருக்க எவன் நல்ல சினிமாவை எடுக்க வருவான்? படைப்பாளிகளுக்கு இங்கு மதிப்பில்லாமல் போயிடுச்சு. கறுப்புப் பணம் வெச்சிருந்தா ஒரு வேளை பயம் இல்லாமல் படம் எடுக்கலாம். சராசரி மனிதர்களின் கையில் இருந்த சினிமா இன்றைக்கு எப்படியோ உரு மாறி, நிறம் மாறி நிற்குது.

"ஒச்சாயி'ன்னு வழக்கு மொழி வார்த்தைக்கு வரி விலக்கு வாங்க போராட வேண்டியிருக்கு. சமஸ்கிருதத்தில் பேர் வெச்சி எத்தனையோ படங்கள் வந்திருக்கு. இதையெல்லாம் யார் கவனிக்குறா? இங்கிலீஷில் சப் டைட்டில் போட்டு ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸôக போகுது. தியேட்டர்காரன் முதல், ரசிகன் வரை எல்லோர் மனசிலும் சப் டைட்டில் மட்டும்தான் பதிஞ்சிருக்கு. முதலில் சப் டைட்டில் போடுவதை தடை செய்யணும்.

இல்லையென்றால் இந்த வரிச்சலுகை என்ற விஷயத்தையே எடுத்துடலாம். அரசுக்காவது வருவாய் கிடைக்கும். அதை வைத்து சத்துணவில் ஐந்து நாள் முட்டை என்பதை ஆறு நாளா ஆக்கிடலாம். சினிமா தொழிலே நலிவடைஞ்சு வருது.

அப்படியிருக்க தொழிலாளர்களுக்கு வீடு மட்டும் வாங்கி என்ன செய்வது? எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. இந்த விஷயத்துக்கும் இருக்கு. அது என்னன்னு  நீங்க சினிமா சங்கங்களிடமே கேளுங்கள்.  நான் மட்டும் தனிப்பட்டு போராட முடியாது.

அமைதியாக இருந்து விட்டு திடீரென, சீமான் விவகாரத்தில் முதல்வரை சந்திக்க போறேன்னு பரபரப்பு பேட்டி தர்றீங்க?   

ஏழு கோடி தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தை செய்யக் கூடாது என்றுதானே திரும்பத் திரும்ப நாம் வீதிகளில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால் இறையாண்மைக்கு எதிரானது என்கிறார்கள்.

இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தவன் தமிழன். இன்று இவனுக்கு யார் இருக்கா?  ஈழ இனமே அழிஞ்சு போச்சு. இன்னைக்கு பிரபுதேவா - நயன்தாரா காதல்தான் பெரிசா இருக்கு.  யாருக்கும் எதைப் பத்தியும் கவலை இல்லை.

வரிச்சலுகை கொடுத்தும் தமிழில் பெயர் வைக்காமல் அரசை ஏமாத்துறாங்க. இவர்களை யார் வந்து காப்பாத்த முடியும். மீதம் இருக்குற தமிழ் உணர்வை காப்பாற்ற சீமான் வெளியில் இருக்கணும். நம் மீனவர்கள் கொல்லப்படும் போது "கொல்லாதே' என்று ஒரு கூச்சலிட்டால் இறையாண்மைக்கு எதிரானதா? சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய எல்லைக்குள் இருக்கும் தமிழர்களைத் துரோகிகளாக பார்த்தால் இழப்பு யாருக்கு? என்பதை காலம்தான் சொல்லும்.
thanks dinamani

No comments:

Post a Comment