Monday, December 13, 2010

கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியது தானே?""நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்?"

""நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்; கூட்டணியை விட்டு நீங்களே வெளியேற வேண்டியது தானே?'' என, காங்., விவசாய அணி மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

அவிநாசி அருகே செங்கப்பள்ளியில், தமிழக காங்கிரஸ் விவசாய அணி மாநாடு நடந்தது. மாநில அமைப்பாளர் பவன்குமார் தலைமை வகித்தார். தேசிய பொறுப்பாளர் அவிநாஷ் காக்ரே முன்னிலை வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:தமிழக காங்., விவசாய பிரிவு மாநாடு வளாகம் முழுவதும், வேறு எந்த கொடி துணையில்லாமல், மூவர்ண கொடி தனியாக பறப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில், விரைவில் மூவர்ண கொடி தைரியமாக பறக்கும். இலவசமாக மோட்டார் தருவோம் என்று சொல்கின்றனர்.அதில் 4 ஸ்டார், 5 ஸ்டார் என்று ஓட்டல் மாதிரி சொல்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், செம்பு கம்பி சுற்றப்பட்ட பழைய மோட்டாரை வாங்கி விட்டு, அலுமினிய கம்பி உள்ள மோட்டாரை தருகின்றனராம். இது எப்படியிருக்கிறது என்றால், தங்கத்தை வாங்கி கொண்டு, வெள்ளியை தருவது போல் உள்ளது.இலவச மின்சார இணைப்பை 20 லட்சம் விவசாயிகளுக்கு தருகின்றனர் என்கின்றனர். ஆனால், இணைப்பு தருவதற்கு விதிக்கப்பட்டுள்ள உத்தரவால், 20 ஆயிரம் பேர் கூட இணைப்பு பெற முடியாது.

"கூட்டணியில் இருக்கிறோம்' என்பதற்காக, "சும்மா' இருந்தால், நமது தன்மானம் கெட்டு விடும்.தமிழகத்தில் பல விஷயங்கள் மிக கேவலமாக நடந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி எனக்கூறி எதுவும் பேசாமல் இருந்தால், நம்மையும் மக்கள் சந்தேகப்படுவர். காங்கிரசார் அமைதியாக உள்ளனர் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்ய கூடாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு."எந்தாண்டும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு மழை பெய்துள்ளது' என்று என்னிடம் சொன்னர். நான் சொன்னேன், "அப்படியல்ல, கடந்த நான்காண்டில் ஏற்பட்ட அழுக்கை கழுவுவதற்காக, இவ்வளவு மழை பெய்துள்ளது' என்றேன்.

ஒரு குடும்பத்திற்காக காங்கிரசார் பலியாக வேண்டுமா? இவர்களால், சோனியா, பிரதமருக்கு கெட்ட பெயர். நாங்களா வேண்டாமென்று சொல்கிறோம்; கூட்டணியை விட்டு நீங்களே வெளியேற வேண்டியது தானே?இவ்வளவு நாள் நாம் பொறுமையாக இருந்து விட்டோம். ஆனால், இளைஞர் காங்கிரசார் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதிலே கூறவில்லை.கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கடந்த இரு தினங்களாக மிகவும் வெளிச்சமாக உள்ளது. மன்னர், பேரரசு என்று சொல்லி வந்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய காலம் விரைவில் வரும். வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்றி வந்துள்ளீர். இனியும் ஏமாறுவோம் என்று நினைக்காதீர்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.(dinamalar)

No comments:

Post a Comment