Wednesday, December 8, 2010

செய்த பாவங்களுக்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும்



 ""கருணாநிதி தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது,'' என, ஜெயலலிதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:
கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கி, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. பல நூறு கி.மீ., சாலைகள் சேதமடைந்துள்ளன.லட்சக்கணக்கானோர் வீடுகளை இழுந்து, நிவாரணத்திற்காக கவலையோடு காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மக்களை பற்றி கவலைப்படாமல், அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில், ஆனந்தமாக பொழுதை கழித்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.இவ்விழாவில், ஒரு புராணக் கதையுடன் ஒப்பிட்டு, இத்தனை கோடி ரூபாய் ஊழலை ராஜா ஒருவரால் மட்டும் செய்திருக்க முடியாது என்ற வகையில், தன் கருத்தை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். இது கலப்படம் இல்லாத உண்மை. கருணாநிதி, மகள் கனிமொழி மற்றும் சிலரும் இந்த சுரண்டலின் பங்குதாரர்கள் என்பதை, தானே ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

ஸ்பெக்ட்ரம் ஊழலில், மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டுமென, காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக அச்சுறுத்துவது போல், கருணாநிதியின் பேச்சு அமைந்துள்ளது. ராஜாவை நெருக்கிப் பிடிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட தயங்க மாட்டேன் என கருணாநிதி எச்சரித்திருக்கிறார். இது போன்ற உண்மையை வெளியிடுவதை காங்கிரஸ் விரும்பாது என்பது தான் இதன் பொருள். கருணாநிதி கூட்டணியை மிரட்டும் பாணி இது.

ராஜா பதவி விலகியது மட்டுமே இந்த பிரச்சனைக்கு முடிவல்ல; இதில் பல்வேறு உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டும்; கை மாறிய பணம் திரும்ப பெற வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; விசாரணை குறித்த அறிக்கை அன்றாடம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்; அனைவருக்கும் தெரியும்படி நீதி வழங்கப்பட வேண்டும்.இதற்கு ஒரே வழி, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை தான். இதற்கு ஒப்புக் கொள்கிற வரையில், எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது. இதற்கிடையில், இந்த ஊழலுக்கு பின்னால், அதிக நபர்கள் இருப்பதாக கருணாநிதி சூசகமாக தெரிவித்திருக்கிறார். எனவே, அவரே தானாக முன் வந்து உண்மையை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.

புகார்தாரர்களையும், சாட்சிகளையும் மிரட்டி, அடிபணிய வைத்து, பிறழ் சாட்சிகளாக மாற்றி தன் சொல்படி கேட்க வைக்க முடியாது; தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல், இந்த வழக்கை மாற்ற முடியாது; இந்த செயலற்ற நிலை தான், கருணாநிதியை, கோமாளித்தனமான அறிக்கைகளை வெளியிட செய்திருக்கிறது.ஏன் எனில், தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.(dinamalar)

No comments:

Post a Comment