Wednesday, December 8, 2010

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை



 ""ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி:


இன்றைய தினம் நாடு முழுக்க, டில்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில், ராஜாவின் வீடுகளில், சி.பி.ஐ., சோதனை நடைபெற்றுள்ளதே?

சி.பி.ஐ., சோதனைகள் நடைபெறுவது ஒன்றும், பெரிதாகப் பேசப்படும் விஷயம் இல்லையே!

சி.பி.ஐ., சோதனை நடைபெற்றதை அவமானகரமான ஒன்றாக கருதுகிறீர்களா?
அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டில் இருக்கின்றனர்.

ராஜா கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவார் என சொல்லப்படுகிறதே?
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என தி.மு.க., நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் நாங்கள் ராஜாவை கைவிடத் தயாராக இல்லை.

ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், காங்கிரஸ் கட்சியை நீங்கள், பிளாக் மெயில் செய்வதாக சொல்லியிருக்கிறாரே?
பிளாக் மெயில் செய்யும் கலை எல்லாம், ஜெயலலிதாவுக்குத்தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.

ஜெயலலிதா அறிக்கையில், சி.பி.ஐ., விசாரணையை விரிவாக்கி, அது பற்றி தோண்டினால், மேலும் விவரம் கிடைக்கும் என சொல்லியிருக்கிறாரே?
அந்த அம்மையாரிடம் கூட சி.பி.ஐ., விசாரித்தால், எவ்வளவோ கிடைக்கும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது.

பார்லிமென்ட் உறுப்பினர்களின் கூட்டுக் குழு வேண்டும் என்பதைப் பற்றி?
அதைப்பற்றி இன்றைய தினம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பா.ஜ., ஆட்சி காலத்திலிருந்தே, ஸ்பெக்ட்ரம் பிரச்னையைப் பற்றி, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சொல்லியிருக்கின்றனர். அதற்கு கூட்டுக் குழு வேண்டுமென்று கோரும் பார்லிமென்ட் உறுப்பினர்களின் பதில் என்ன? பத்திரிகையாளர்களாகிய உங்கள் பதில் என்ன?

நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக அதற்கு தயாராக இருக்கிறீர்களா?
என்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கியதோ, அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில், அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சென்னை ஐகோர்ட்டில் ஒரு நீதிபதியுடன் ராஜா பேச முனைந்ததாக ஒரு வழக்கில் கூறப்பட்டதைப் பற்றி?
அவர் மீதான அந்த குற்றச்சாட்டை, ராஜாவே மறுத்திருக்கிறார். அவ்வளவு தான் எனக்கு தெரியும்.

No comments:

Post a Comment