Sunday, January 2, 2011

ஸ்பெக்ட்ரம் பூதம் : பரிகாரம் தேடும் தி.மு.க.,

இலவச திட்டங்கள் மூலம் இடைத்தேர்தல்களில் ஜொலித்து வந்த தி.மு.க., ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால், மக்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்கை இழந்து வருகிறது. இதை சரிக்கட்டும் வகையில், தற்போது, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி, பரிகாரம் தேடும் பணியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது,
கொடுத்த வாக்குறுதிகளில், ஒன்றிரண்டை தவிர அனைத்தையும் நான்காண்டு கால அவகாசத்திற்குள் நிறைவேற்றிவிட்டு, எப்போது வரும் சட்டசபை தேர்தல் என தி.மு.க., தெம்பாய் காத்திருந்தது.குறிப்பாக, சமையல் காஸ் இணைப்பு, இரண்டு ஏக்கர் நிலம், கான்கிரீட் வீடு, இலவச கலர் "டிவி' என அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள் கிராமப்புறங்களில் அக்கட்சிக்கு நல்ல செல்வாக்கை பெற்று தந்துள்ளன. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீடு, "108' ஆம்புலன்ஸ் திட்டம் என, மக்கள் நலனை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட திட்டங்கள், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை பலமாக்கியது.தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களில், தி.மு.க., தொடர் வெற்றி பெற, இந்த திட்டங்களே பெரிதும் துணையாய் இருந்தன. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பிரசாரமும், இதை மையப்படுத்தியே இருந்தது.

தற்போது தேர்தலுக்கு முன்பாக, குடிசைகளுக்கு மாறாக கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டப்பணிகளை, ஆளுங்கட்சி முடுக்கி விட்டுள்ளது. இதைவிட ஒருபடி மேலாக, இத்திட்டத்தின் பலன் பெறுவோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வீடு உறுதியாக கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுக்கும் பணியிலும் அரசு இறங்கியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த திட்டங்களோடு, மேலும் சில இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க ஆளுங்கட்சி இலக்கு நிர்ணயித்திருந்தது.கிராமம், நகரம் என்று எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும், அரசின் இலவச, கவர்ச்சிகரமான திட்டங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் பயனடையாத வீடுகளே இல்லை என்ற உளவுத்துறையின் அறிக்கையும் தி.மு.க.,விற்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

"வெண்ணெய் திரண்டு வரும் போது, தாளி உடைந்த கதையாய்' இவை அத்தனையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தற்போது மக்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முன்னிலை பெற்றுள்ளது, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் செய்யும் பிரசாரம் கிராமங்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகரங்களில் இருப்பவர்களை விட அதிகமாக கிராமத்தில் இருப்பவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.இலவச திட்டங்கள் மூலம், இதுவரை பெற்றிருந்த நல்ல பெயரை, ஸ்பெக்ட்ரம் பூதம் முழுமையாக விழுங்கி விட்டது என்று வருந்துகின்றனர் தி.மு.க.,வினர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு, கோர்ட் கண்டனம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், இவற்றிற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என தெரியாமல் ஆளுங்கட்சி தடுமாறியது.

எவ்வகையாக விளக்கங்களை அளித்து, பொதுமக்களின் மனதை மாற்றலாம் என்ற ஆலோசனை தொடர்ந்து நடந்தது. "இந்த விவகாரத்தில் நாம் அமைதியாக இருந்தால், குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டது போலாகி விடும்.எனவே, பொதுக்கூட்டங்கள் மூலம், நம் நிலையை விளக்க வேண்டும். அப்போது தான், ஓரளவிற்காவது இழந்த பெயரை தடுக்க முடியும்; தொடர்ந்து பெயர் கெடாமல் காப்பாற்ற முடியும்' என்று மூத்த அமைச்சர்கள் வற்புறுத்தினர்.

இதையேற்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விளக்கமளிக்கும் பொதுக்கூட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். சரியும் செல்வாக்கை தடுத்து நிறுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இவ்விவகாரத்தில் மக்களின் மனதை மாற்ற என்ன செய்யலாம் என்ற ஆலோசனை ஆளுங்கட்சி வட்டாரத்தில் தொடர்கிறது.இலவச மற்றும் மக்கள் நல திட்டங்கள் மூலம் சேர்த்து வைத்த நற்பெயரை மீட்க, தி.மு.க., எடுக்கும் முயற்சிகளுக்கான பலன் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு விடையாக சட்டசபை தேர்தல் முடிவுகள் அமையும் என்பது உறுதி

No comments:

Post a Comment