Sunday, January 2, 2011

தி.மு.க.,வால் காங்கிரசுக்கு கெட்ட பெயர்

""தி.மு.க., செய்யும் தவறுகளுக்கு, அவர்களுடன் சேர்ந்திருப்பதால் காங்கிரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே அவர்களிடம் விலகியிருக்க வேண்டும்'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார்.
அன்னை இந்திரா தேசிய பேரவை சார்பில், காங்கிரஸ் கட்சியின் 126ம் ஆண்டு விழா சென்னை பெரம்பூரில் நடந்தது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:காங்., கட்சியை சேர்ந்த சிலர் என்னிடம், எங்களை சோனியாவிடம் அழைத்து செல்லுங்கள்; தமிழகத்தில் இனி இவர்களுடன் இருக்கக் கூடாது என்று, நம் நிலையை சொல்ல வேண்டும் என, என்னிடம் கேட்கின்றனர். கொஞ்ச காலமாக காங்., தொண்டர்கள் விரக்தியுடன் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.நமக்கு இங்கே அங்கீகாரம், மரியாதை வேண்டும்; மற்றவர்களை போல் தங்கள் பைகளை நிரப்ப நாம் விரும்பவில்லை. தமிழக மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வர நினைக்கிறோம். பொருள் சேர்க்கவோ, கொள்ளை அடித்து குடும்பத்தை, குடும்ப உறுப்பினர்களை வாழ்விக்கவோ நாம் விரும்பவில்லை. ஆனால் அப்படி பேராசைபட்டவர்கள், பொருள்களை சேர்த்து விட்டு, ஊழல் என்றாலே எனக்கு வெறுப்பு; எனக்கு இருப்பது ஒரே வீடு தான் என்கின்றனர்.

கடந்த ஆண்டின் நகைச்சுவை என்னவென்றால், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி இப்படி பேசியது தான் என நான் சொல்வேன். அவர்களோடு நாம் இருக்கக் கூடாது. கரைபடாத கைகளை கொண்ட நமக்கு அவர்கள் செய்யும் ஊழலால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர்களது தவறுக்கு நாம் பலிகடா ஆகிறோம். மக்களுக்காக ஆட்சி செய்த காமராஜரின் முதல்வர் பதவியை, எது கிடைத்தாலும் சுருட்டலாம் என்ற நினைப்புடன் சிலர் வகிக்கின்றனர்."காங்.,க்கு ஸ்பெக்ட்ரம் தலைவலி யாரால் வந்தது; நம் மீது குற்றசாட்டு வந்தால் உடனே சற்று ஒதுங்கி நில் என, மேலிடம் கட்டளையிடும். ஆனால் ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் கழுத்தை பிடித்து தள்ளி, இனி டிஸ்மிஸ் தான் என்ற நிலை ஏற்படும் என்ற போது தான், பதவியை கைவிட்டனர்.

எங்களோடு இருந்தால் திருந்துவீர்கள் என, நினைத்து சேர்ந்தோம்; ஆனால் திருத்தவே முடியாது, என்ற நிலையில் இருக்கிறார்கள். அதனால் நாங்களே விலகி விடுகிறோம் என முடிவெடுத்து, மேலிடத்திற்கும் தெரிவித்துள்ளோம். இதையே விரைவில் மேலிடமும் சொல்லும்.நான் காங்., தொண்டன் என்ற முறையில் உண்மையை பேசுகிறேன். என்னை எவரும் தடுக்க முடியாது. சிலர் சூழ்நிலை, பதவி காரணமாக பேச முடியாமல் இருக்கின்றனர். ஆனால், தொண்டர்கள் எண்ணம் மேலிடத்திற்கும் தெரியும்.ராகுல் சென்னை வந்த போது, மூத்த அரசியல்வாதியை பார்க்கவில்லை என்ற கோபத்தில், தி.மு.க., பொதுக்கூட்டங்களில் ராகுலையும், சோனியாவையும் திட்டுகின்றனர். திட்டுவது, புறம் பேசுவது போன்ற கெட்ட விஷயங்களுக்கு தி.மு.க., வினருக்கு தான் சர்டிபிகேட் தர முடியும்.
என்னை வெற்றி பெற வைத்து மத்திய அமைச்சராக்கியது தி.மு.க., என்கின்றனர். நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி முதல் அமைச்சர்கள் வரை, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வரை அனைவரையும் வெற்றி பெற வைத்தது காங்., தான் என்பதை நீங்கள் ஒப்புகொள்வீர்களா?

கடந்த பார்லி தேர்தலில் என்னையும், பிரபு, கார்வேந்தன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு உட்பட ஏழு பேரை தோற்க வைத்தது தி.மு.க., தான். அந்த தேர்தலில் தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காவிட்டால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங். வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் வேளாண்மை துறையில் ஊழல் நடந்துள்ளது. என்னைச் சீண்டினால் அவற்றை வெளியிடுவேன்.எனவே, எங்கள் உணர்வுகளை மேலிடத்தில் சொல்லி விட்டோம். இன்னும் 15 நாட்களில் காங். விழித்துக் கொள்ளும். மேலிட நடவடிக்கை தெரியும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ராணி வெங்கடேசன், பழனிசாமி, உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment