Thursday, January 6, 2011

கேப்டவுன் டெஸ்ட் "டிரா: தொடரை சமன் செய்தது இந்தியா


இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டவுன் டெஸ்ட் "டிரா ஆனது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை (1-1) முதன் முறையாக சமன் செய்தது இந்தியா.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 362, இந்தியா 364 ரன்கள் எடுத்தன. பின்னர் 2 வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா அணி 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 341 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சேவக் "அவுட்: 
நேற்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சேவக், காம்பிர் இந்திய அணிக்கு துவக்கம் தந்தனர். வழக்கத்துக்கு மாறாக, நிதானமாக ஆடினார் சேவக். ஆனால் இதுவும் அவருக்கு கைகொடுக்க வில்லை. வெறும் 11 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார்.
காம்பிர் அரை சதம்: 
பின் காம்பிருடன், டிராவிட் இணைந்தார். இந்த ஜோடி, தென் ஆப்ரிக்க வேகங்களை சமாளித்து பொறுப்புடன் ஆடியது. டெஸ்ட் அரங்கில் 15 வது அரை சதம் கடந்தார் காம்பிர். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு, 79 ரன்கள் சேர்த்த நிலையில், டிசோட்சபேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் டிராவிட் (31). அடுத்து சச்சின் களமிறங்கினார்.
நிதான ஆட்டம்: 
ஆட்டத்தை "டிரா செய்யும் நோக்கில் விளையாடிய சச்சின் ஒவ்வொரு ரன்களாக சேர்த்தார். இவருடன் சேர்ந்த அனுபவ வீரர் லட்சுமண், அவ்வப்போது பவுண்டரி விளாசினார். 82 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 166 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே, ஆட்டத்தை "டிரா செய்ய இரு அணிகளும் முடிவு செய்தன. சச்சின் (14), லட்சுமண் (32) அவுட்டகாமல் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 கணக்கில் சமனானது.
முதல் முறை: 
தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு இந்த முறை நிறைவேற வில்லை. இருப்பினும் முதல் முறையாக டெஸ்ட் தொடரை "டிரா செய்து திருப்தி அடைந்துள்ளது. இதுவரை 5 முறை தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது இந்தியா. இதில், 4 முறை தொடரை இழந்துள்ளது. இந்த முறை தான் தொடரை "டிரா செய்துள்ளது.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா    362
இந்தியா    364
இரண்டாவது இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா    341
இந்தியா
காம்பிர் (கே) பவுச்சர் (ப) ஸ்டைன்    64 (184)
சேவக் (கே) ஸ்மித் (ப) மார்கல்    11 (40)
டிராவிட் (கே) பிரின்ஸ் (ப) டிசோட்சபே    31 (112)
சச்சின் -அவுட் இல்லை-    14 (91)
லட்சுமண் -அவுட் இல்லை-    32 (67)
உதிரிகள்    14
மொத்தம்    (82 ஓவரில் 3 விக்., இழப்பு)    166
விக்கெட் வீழ்ச்சி: 1-27 (சேவக்), 2-106 (டிராவிட்), 3-120 (காம்பிர்). 
பந்து வீச்சு: ஸ்டைன் 18-6-43-1, மார்கல் 15-6-26-1, டிசோட்சபே 13-4-29-1, ஹாரிஸ் 30-19-29-0, ஸ்மித் 4-0-27-0, பீட்டர்சன் 2-0-5-0. 
ஸ்ரீசாந்துக்கு அபராதம்
கேப்டவுன் டெஸ்டின் 4 வது நாள் ஆட்டத்தின் போது, பந்து வீசிய இந்திய வீரர் ஸ்ரீசாந்த், தென் ஆப்ரிக்க வீரர்களான காலிஸ், பவுச்சர் ஆகியோருக்கு எதிராக எல்.பி.டபிள்யு., கேட்டார். ஆனால், அம்பயர் "அவுட் தர மறுக்கவே, பவுண்டரி எல்லைக்கு சென்று கயிறை காலால் உதைத்து தள்ளினார். ஐ.சி.சி., ஒழுக்க விதிமுறைகளின் படி, இது குற்றமாகும். இதனால் ஸ்ரீசாந்துக்கு போட்டி சம்பளத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 
* கேப்டவுன் டெஸ்டின் 2 வது இன்னிங்சில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை விட குறைவாக (3 ஓவர்கள் ) வீசிய இந்திய அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டி சம்பளத்திலிருந்து கேப்டன் தோனிக்கு 60 சதவீதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு 30 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. 
காம்பிர் சந்தேகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில், காம்பிர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேப்டவுன் டெஸ்டின், 3 ம் நாள் ஆட்டத்தின் போது, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டிசோட்சபே வீசிய பந்து, காம்பிரின் இடது முழங்கையில் பலமாக தாக்கியது. இதனால் 4 வது நாள் ஆட்டத்தில், இவர் பீல்டிங் செய்ய வரவில்லை. நேற்றைய போட்டியின் போதும், மார்கல் வீசிய பந்து முழங்கையில் மீண்டும் தாக்கியது. இதனால் ஒரு நாள் தொடரில் காம்பிர் இடம் பெறுவது கடினம் தான். காம்பிர் இடம் பெற வில்லை என்றால், முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அணி அறிவிப்பு
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 12 ம் தேதி டர்பனில் துவங்குகிறது. இத்தொடருக்கான 14 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
 அணி வருமாறு: ஸ்மித் (கேப்டன்), ஆம்லா, போத்தா, டிவிலியர்ஸ், டுமினி, பிளஸ்சிஸ், இங்ராம், டேவிட் மில்லர், மோர்னே மார்கல், பார்னெல், பீட்டர்சன், ஸ்டைன், இம்ரான் தாஹிர் மற்றும் டிசோட்சபே. 
ஹர்பஜன் பாய்ச்சல்
இந்திய அணியின் வெற்றி நழுவியதற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என, ஹர்பஜன் குற்றம்சாட்டியுள்ளார். இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து திணறியது. பின் காலிஸ்(109) மற்றும் "டெயிலெண்டர்கள் கைகொடுக்க, வலுவான இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் 7 விக்கெட் வீழ்த்திய போதும், ஜாகிர், ஸ்ரீசாந்த், இஷாந்த் உள்ளிட்ட வேகங்கள் ஏமாற்றினர். 
இது குறித்து ஹர்பஜன் கூறுகையில்,""ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதனை பயன்படுத்தி தென் ஆப்ரிக்க பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். ஆனால், நமது வேகப்பந்துவீச்சாளர்கள் ஏமாற்றினர். அணியின் வியூகமும் சுத்தமாக எடுபடவில்லை,என்றார்.
கலக்கல் காலிஸ்
டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், தென் ஆப்ரிக்காவின் காலிஸ் முதலிடம் பிடித்தார். மூன்று டெஸ்டில் விளையாடிய இவர், 3 சதம் உட்பட 498 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (326 ரன்கள்) முதலிடம் பிடித்தார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர்    போட்டி    ரன்    சதம்/அரைசதம்
காலிஸ் (தெ.ஆ.,)    3    498    3/0
சச்சின் (இந்தியா)    3    326    2/0
ஆம்லா (தெ.ஆ.,)    3    250    1/1
காம்பிர் (இந்தியா)    2    242    0/3
டிவிலியர்ஸ் (தெ.ஆ.,)    3    201    1/0
ஸ்டைன் துல்லியம்
டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடம் பிடித்தார். மூன்று டெஸ்டில் விளையாடிய இவர், மொத்தம் 21 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா சார்பில் ஹர்பஜன் சிங் (15 விக்.,) முதலிடம் பிடித்தார்.
இவ்வரிசையில் "டாப்-5 பவுலர்கள்:
வீரர்    போட்டி    விக்கெட்
ஸ்டைன் (தெ.ஆ.,)    3    21
மார்கல் (தெ.ஆ.,)    3    15
ஹர்பஜன் (இந்தியா)    3    15
ஜாகிர் (இந்தியா)    2    10
ஸ்ரீசாந்த் (இந்தியா)    3    9
செஞ்சுரியன் "620
இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முதலிடம் பிடித்தது. செஞ்சுரியனில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 620 ரன்கள் குவித்து, "டிக்ளேர் செய்தது. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் 459 குவித்த இந்திய அணி, இத்தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* இத்தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் காலிஸ் முதல் இரண்டு இடங்களை பிடித்தார். இவர் செஞ்சுரியனில் 201 (அவுட் இல்லை), கேப்டவுனில் 161 ரன்கள் எடுத்தார். கேப்டவுன் டெஸ்டில் 146 ரன்கள் எடுத்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 3வது இடம் பிடித்தார்.
* இத்தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முதலிடம் பிடித்தார். கேப்டவுன் டெஸ்டில் இவர் 7 விக்கெட் வீழ்த்தினார். டர்பன் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், 2வது இடம் பிடித்தார்.
இந்தியா "நம்பர்-1
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை "டிரா செய்த இந்திய அணி (128 புள்ளி), ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் "நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்க அணி (117 புள்ளி) 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. மூன்றாவது, 4வது இடத்தில் இங்கிலாந்து (112 புள்ளி) ஆஸ்திரேலியா (110 புள்ளி) அணிகள் உள்ளன.(dinamalar)

No comments:

Post a Comment