Wednesday, January 5, 2011

அழகிரியை சமாதானப்படுத்த மேலிடம் முயற்சி


முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் கொள்கை பரப்புச் செயலர் பதவியைப் பறித்து, அவரை கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் அழகிரி வலியுறுத்தியதாகவும்,
அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 3ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை தி.மு.க., தலைவர் கூட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், தி.மு.க.,வை ஆட்டிப் படைத்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டுக்குப் பிறகும் மத்திய அமைச்சர் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்ததும், அதற்கு முதல்வர் கருணாநிதி ஒப்புதல் கொடுத்ததும் கட்சியில் பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டன. தொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்தார். இதன் பிறகும், ராஜாவின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சி.பி.ஐ., புகுந்தது. முதல்வரின் மகள் கனிமொழி எம்.பி., அறங்காவலராக உள்ள தமிழ் மைய அலுவலகத்திலும் சி.பி.ஐ., ரெய்டு நடந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நிரா ராடியாவுடன், கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் பூங்கோதை பேசிய, "டேப்' வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், இது போன்ற சம்பவங்கள், கட்சியின் இமேஜை குறைக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க.,வில் குமுறல்கள் எழுந்தன.

"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், நமது சாதனைகள் எல்லாம் மறைந்து, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது; அவரிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பறித்தது போலவே, அவரது கொள்கை பரப்புச் செயலர் பதவியையும் பறித்து, கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். தமிழக அமைச்சர் பூங்கோதையிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும்; சென்னை சங்கமம் விழாவை நடத்தக்கூடாது; கட்சியில் கனிமொழிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை, மத்திய அமைச்சர் அழகிரி முதல்வரிடம் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், "நாமாக ராஜாவின் கட்சிப் பதவியைப் பறித்தால், அது நாமே அவர் ஊழல் செய்ததை ஒப்புக் கொண்டதாகி விடும். அதனால், சற்று பொறுத்திருப்போம். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடக்கப் போகிறதா, சி.பி.ஐ., விசாரணையின் போக்கு எப்படி போகிறது. சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் பார்த்து முடிவெடுப்போம்' என, கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு அன்று மதுரையில், தன்னை சந்திக்க வந்த நிருபர்களிடம், "நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள்' என்று கூறியதாக தகவல் பரவியது. அத்துடன் இது பற்றிய கடிதத்தையும், கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அனுப்பியதாகவும் வதந்தி பரவியது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மதியம் மதுரையில் இருந்து சென்னைக்கு அழகிரி விமானத்தில் வந்தார். முதல்வரை சந்தித்து, தன் மூன்று கோரிக்கைகளையும் அழகிரி வலியுறுத்தியுள்ளார். "கட்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்டி முடிவெடுக்கலாம்' என்று முதல்வர் அவரிடம் தெரிவித்ததாகவும், அதன்படி அவசரமாக உயர்மட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், முதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி, உயர்மட்டக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, மதுரை சென்றுவிட்டார். கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில், அழகிரியின் கோரிக்கை குறித்து விவாதம் நடந்துள்ளது. "இந்த விஷயத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டலாம்' என்று மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் பிப்ரவரி 3ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை உணர்ந்து, ராஜா தானாக முன்வந்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நோக்கில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். "பொதுக்குழுவை கூட்டி, அதில் ராஜாவின் ராஜினாமாவை கோரும் அளவுக்கு, அவர் ஒன்றும் மூத்த நிர்வாகி அல்ல. அதனால், கட்சித் தலைமையே அவரது ராஜினாமாவை கேட்டுப் பெற வேண்டும்' என்ற வலியுறுத்தலும் தொடர்ந்து வருவதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா - டி.ஆர்.பாலு சந்திப்பு! இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு நேற்று சந்தித்தார். மத்திய அமைச்சர் பதவியை அழகிரி ராஜினாமா செய்து கட்சித் தலைமையிடம் கொடுத்த கடிதத்தை, சோனியாவிடம் கொடுக்கவே, இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானதால், பரபரப்பு அதிகரித்தது. ஆனால், தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் வலியுறுத்தியிருந்த வெள்ள நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கவே, இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, அழகிரி ராஜினாமா குறித்து எழுந்துள்ள வதந்தியை டி.ஆர்.பாலு திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment