Friday, January 7, 2011

பொங்கலுக்குப் பின் கூட்டணி பேச்சுவார்த்தை: முதல்வர் கருணாநிதி

 பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
 திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. கட்சித் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
 ஆளுநர் உரையை கூட்டணிக் கட்சிகள் வரவேற்று இருக்கிறார்கள்; ஆனால், எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் என்று சொல்லியிருக்கிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் சொல்வார்கள், அதில் என் கருத்து ஒன்றுமில்லை என்றார் கருணாநிதி.
 திமுகவுக்குள் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தொடர்ந்து நீடிப்பது சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே என்று கேள்விக்கு, அதைப் பெரிய நெருக்கடியாகக் கருதவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு கூடி அதுபற்றி விவாதித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 திமுகவுடனான உறவு வலுவாக உள்ளதாக பிரதமரும், சோனியா காந்தியும் சொல்லி வருவதாகக் கூறிய கருணாநிதி, பொங்கல் விழா முடிந்த பிறகு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார்.
 பாமக போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வர சிக்னல்கள் கொடுத்திருக்கிறார்களா? எப்போது அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, அதற்கான தேதியை இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றார்.
 
அழகிரி கடிதம் கொடுக்கவில்லை
 அழகிரி ராஜிநாமா கடிதம் ஏதும் கொடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
 சென்னையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
 அலைக்கற்றை விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த கருணாநிதி, இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கும்போது நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
 மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, அலைக்கற்றை விவகாரம் குறித்து பிரதமர் உட்பட அனைவரும் பதில் சொல்லியாகி விட்டது. குறிப்பாக, மத்திய அமைச்சர் கபில்சிபில் விவரமாகக் கூறி இருக்கிறார். நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment