Sunday, January 9, 2011

சேலத்தில் தே.மு.தி.க.,


சேலத்தில் நேற்று நடைபெற்ற தே.மு.தி.க.,வின், "மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில்' லட்சக்கணக்கான தொண்டர்கள் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் குவிந்தனர். இம்மாநாட்டை ஒட்டி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 1,000 கி.மீ., தூரத்திற்கு வண்ண பாலிதீன் பேனர்கள்,
போஸ்டர்கள் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி ஆயத்த மாநாடாக நேற்றைய மாநாடு காட்சி அளித்தது.
விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பில், "மக்கள் உரிமை மீட்பு மாநாடு' சேலத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக காலை 8 மணி முதல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வாகனங்களில் வந்து தீவட்டிப்பட்டியில் குவிந்திருந்தனர். வரவேற்பு வளைவுகள், பேனர்கள், தோரணங்கள், கட்சிக் கொடிகள் என, தீவட்டிப்பட்டி களை கட்டியது. "மஞ்சள் டி-சர்ட்', கறுப்பு பேன்ட் சகிதமாக சீருடையில் அணிவகுத்த தே.மு.தி.க., இளைஞரணியினர், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

பிற்பகல் 12.34 மணிக்கு 250 வாகனங்கள் பின்தொடர, பிரத்யேக பிரசார வேனில் விஜயகாந்த், தீவட்டிப்பட்டிக்கு வந்தார். அப்போது, உற்சாகமடைந்த தொண்டர்கள், வெற்றியை உணர்த்தும் விதமாக கட்டைவிரலை உயர்த்திக் காட்டி வரவேற்றனர்.வரவேற்பை ஏற்றுக் கொண்ட விஜயகாந்த், திரண்டிருந்த கூட்டத்தினரை பார்த்து கை கூப்பி வணங்கினார். பின், சேலம் நோக்கிப் புறப்பட்டார். அவருடன், 250 வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன. பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வந்த ஏராளமான வாகனங்களும் பின் தொடர, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. பிற்பகல் 1.25 மணிக்கு விஜயகாந்த், மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 - 1.30 மணி வரை எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்த பின், விஜயகாந்த் பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டு கொடியை 1.45 மணிக்கு ஏற்றிவைத்தார். பின், சமாதான புறாவை பறக்க விட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரை தொடர்ந்து பிரேமலதா, மாநாட்டு திடலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து சாமி கும்பிட்டார். அவருடன், மாநில இளைஞரணி செயலர் சுதீஷ், மாவட்ட செயலர்கள் ராதாகிருஷ்ணன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, மாநாட்டு மேடையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த தொண்டர்கள் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் குவிந்திருந்தனர். அதே நேரத்தில், நேற்று நடைபெற்ற தே.மு.தி.க., மாநாட்டையொட்டி, தமிழகம் முழுவதும் 1,000 கி.மீ., தூரத்திற்கு தே.மு.தி.க., கட்சிக் கொடிகள் மற்றும் வண்ண பாலிதீன் பேனர்கள், போஸ்டர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. "இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவேண்டும்' என்று அக்கட்சி கோரியுள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க., கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுதீஷ் கூறியதாவது: "சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து, சேலத்தில் மாநாடு நடக்கும் இடம் வரை 350 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து, சேலம் வரை 310 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, கோவை - சேலம் இடையே 165 கி.மீ., தூரத்திற்கும், விருத்தாசலம் - சேலம் இடையில் 210 கி.மீ., தூரத்திற்கும் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,000 கி.மீ., தூரத்திற்கு பேனர்கள் கட்டப்பட்டன. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய சாதனை. தேர்தல் கூட்டணி பற்றி தலைவர், முறைப்படி உரிய காலத்தில் அறிவிப்பார். தொண்டர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.இவ்வாறு சுதீஷ் கூறினார்.

நேற்றிரவு மாநாட்டில் முதலில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரை கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பேசினார்.

கட்சியையும் தொண்டர்களையும் அடகு வைக்க மாட்டேன் : விஜயகாந்த் : ""கட்சியையும், தொண்டர்களையும் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; உங்கள் தன்மானம் கெடாத அளவிற்கு கட்சி செயல்பாடு இருக்கும்,'' என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்.கருணாநிதி கீழ்த்தரமான அரசியல் நடத்தி வருகிறார். கருணாநிதி குடும்பம் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், கோவில் கோவிலாக போகின்றனர். திருக்குவளைக்கு சென்றால் ஊதுவத்தி வாடையில் தான் கருணாநிதி இருக்கிறார். இதை விஜயகாந்த் கூறினால் நான் பைத்தியக்காரன், முட்டாள் என்கின்றனர்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாங்கள் நிரபராதிகள் என்று கூறுபவர்கள், ராமாயணத்தில் சீதை தீக்குளித்து நிரூபித்ததைப் போல், குதிக்க வேண்டியது தானே. ராஜாவின் ஜாதியை சொல்லி தப்பித்து விடுகிறார். 1967ல் அண்ணா மறைவுக்கு பின், முதல்வராக கருணாநிதி வருவதற்காக ஜாதியை பயன்படுத்தினார்.

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என கூறுகிறார். கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள். உங்களுடைய வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் இலவசங்களை வழங்குகிறார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏழைகள் வயிற்றில் அடித்து பிழைக்கும், கருணாநிதியை அழிக்க வேண்டும். மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால், அவர் 10 நிமிடம் உண்ணாவிரதம் இருந்து விட்டு, மக்களை ஏமாற்றுகிறார்.

விஜயகாந்த் கூட்டணிக்கு போவாரா? மாட்டாரா? என பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்; நீங்களும் (பொதுமக்கள்) எதிர்பார்க்கிறீர்கள். கட்சித் தொண்டர்களை அடகு வைக்க மாட்டேன்; உங்கள் தன்மானத்தை இழக்க விட மாட்டேன். நமக்கு வயது இருக்கிறது; போராடுவோம். நான் அடிமையாக மாட்டேன். ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகள் அடிமைப்பட்டு கிடக்கின்றன. தே.மு.தி.க., இன்று முதலிடத்தில் உள்ளது. கூட்டணியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் தன்மானம் கெடாத வகையில் கட்சி செயல்பாடு இருக்கும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

டிராபிக் ஜாமில் சிக்கிய விஜயகாந்த் வாகனம் : சேலம் வீராசாமி புதூரில் நேற்று தே.மு.தி.க., மாநாடு நடந்தது. மாலை 4 மணிக்கு மாநாடு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. மதியம் 1 மணி முதல் கட்சி தொண்டர்கள் குவியத் தொடங்கினர். விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி விட்டு, சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். மாலை 4 முதல் 6 மணி வரை ராகுகாலம் என்பதால், 6.15 மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பினார். சீலநாயக்கன்பட்டியை கடந்து சென்றபோது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததால், அவ்வழியாக சென்ற அரசு பஸ்கள் நெரிசலில் சிக்கி நின்றன. மாநாட்டு மேடைக்கு புறப்பட்டு வந்த விஜயகாந்த் வாகனமும் அதில் சிக்கிக் கொண்டது. டிராபிக்கை போலீசார் சரி செய்தனர். 20 நிமிட தாமதத்துக்குப் பின் அவர் மேடையை சென்றடைந்தார்.

ஜெயா "டிவி' கேமராமேன் மீது தாக்குதல் : சேலத்தில் நேற்று தே.மு.தி.க., மாநாடு நடந்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை படம் பிடிக்க ஜெயா "டிவி' வீடியோகிராபர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கட்சித் தலைவர் விஜயகாந்த் மேடைக்கு வந்தார். கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் திடீரென கற்களை வீசினர். அப்போது பத்திரிகை போட்டோகிராபர்கள், கேமராமேன் மீது கற்கள் விழுந்தன. அதில், ஜெயா "டிவி' கேமராமேன் ரியாஸ் கண்ணில் கல் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவரை, மற்ற பத்திரிகையாளர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் : பிரேமலதா அறிவிப்பு: மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது:கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொல்லும் மாவட்டம் என, சேலத்தைக் குறிப்பிடுவர். அந்த சேலத்தில் தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை விஜயகாந்த் கொண்டு வந்தார். இந்த மாநாடு வெற்றிக்கு அச்சாரமாக, முன்மாதிரியான மாநாடாக அமைந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க விஜயகாந்தை ஹெலிகாப்டரில் அழைத்து வர மாவட்ட செயலர்கள் விரும்பினர்.ஆனால், அவர் எப்போதும் மக்களுடன் இருப்பவர். அதனால் தான் கார் மூலம் வந்து சேர்ந்தார். இதுபோன்ற கூட்டத்தை மற்ற கட்சிகளால் கொண்டு வரமுடியுமா? தே.மு.தி.க., கூட்டிய கூட்டத்தை முறியடிக்க தே.மு.தி.க.,வால் மட்டும் தான் முடியும். விஜயகாந்த் கணவராக கிடைத்திருப்பது உங்களுக்கு பாக்கியமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். லட்சக்கணக்கான தொண்டர்களின் நெஞ்சங்களில் அவர் குடியிருக்கிறார். அதுவே எனக்கு கிடைத்த பாக்கியம். ரசிகர் மன்றங்களாக ஆரம்பித்து இன்று கட்சியாக வளர்ந்துள்ளது. 70 கட்சிகளை புறம்தள்ளி மக்கள் பலத்தாலும், தெய்வ பலத்தாலும் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயநலவாதிகளின் பிடியில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. ஒளிமயமான தமிழகம் அமைய வேண்டும். சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். அராஜகவாதிகள் உள்ள சேலத்தில் மாநாடு நடத்த தே.மு.தி.க.,வைத் தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது.வரும் சட்டசபை தேர்தலின் போது, 234 தொகுதிகளிலும் நானும், விஜயகாந்தும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம். தொண்டர்களும், பெண்களும் எங்களை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு பிரேமலதா பேசினார்.

தொண்டரிடம் கூட்டணிக்கு ஆதரவு கேட்ட விஜயகாந்த்?சேலத்தில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் கட்சி தொண்டர்கள், பத்திரிகையாளர்கள், ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர் பலரும் விஜயகாந்த் என்ன முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். பேச்சை முடிக்கும் வேளையில், கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? என தொண்டர்களை பார்த்து அவர் கேட்டார். அப்போது கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். வேண்டாம் என்று கூறுபவர்கள் யார் என்றபோது யாரும் கை தூக்கவில்லை. சட்டசபையில் ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றால் ஆம் என்று சொல்வார்கள். அதற்கு ஒத்துக்கொள்வதாக அர்த்தம். கூட்டணியைப் பற்றி கவலைப்படாதீர்கள், <உங்கள் தன்மானம் கெடும் அளவிற்கு நடந்து கொள்ளமாட்டேன், நான் யாரிடமும் அடிமையாக மாட்டேன் என்றார். கூட்டணியா, இல்லையா என்பதை குழப்பத்திலேயே விஜயகாந்த் முடித்துள்ளார் என கட்சியினர் தெரிவித்தனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன் : சேலத்தில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:மதுரையில் ஐந்து ஆண்டுக்கு முன் தே.மு.தி.க., துவங்கியபோது கட்சி வளராது, பட்டுபோய்விடும் என்றனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக கட்சி வளர்ந்து தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆளும் கட்சியினரின் தலையீடு உள்ளது. லஞ்சம் கொடுத்தால் தான் காரியும் ஆகும் என்ற நிலை உள்ளது. அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவர்கள் உண்டு. ஆனால் அரசியலுக்கு வந்து சொத்தை இழந்தவர் என்றால் அது விஜயகாந்த் தான்.நமக்கு பெரும் கடமை இருக்கிறது. நமது எதிரி சாமானியன் அல்ல, சகலகலா வல்லவன். தி.மு.க., ஆட்சியை அகற்றுவதே நமது முக்கிய கடமை. இந்த ஆட்சி கூடாது என்று கூறுபவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும். ஆரம்பத்தில் காமராஜர் ஆட்சியை வீழ்த்த அண்ணாதுரை எவ்வாறு செயல்பட்டாரோ, அதுபோன்று வரும் தேர்தலில் தி.மு.க.,வை அகற்ற களமிறங்க வேண்டும். அவர்களது முகத்தை மூடி மூளையில் உட்கார வைக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் சரி, இளைஞர், பெரியவர்கள், பெண்கள் எல்லோரிடமும் சென்று தி.மு.க., ஆட்சி குறித்து கூறி அவர்களது ஓட்டுக்களை சேகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment