Tuesday, January 25, 2011

அ.தி.மு.க., - தே.மு.தி.க., உற்சாகம்


கூட்டணி முயற்சியை முறியடிக்க எவ்வளவோ சதிகள். அத்தனையையும் மீறி, அமைதியாக இருக்கின்றன அ.தி.மு.க.,வும் - தே.மு.தி.க.,வும். இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்திருக்கிறது, தி.மு.க.,வை தோற்கடித்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், தாங்கள் கூட்டணி சேர்வது அவசியம் என்று.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்., -பா.ம.க., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவான
கூட்டணி அமைத்திருந்த தி.மு.க., 40க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. சுதாரித்துக் கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இழப்பை ஈடுகட்டினார். ம.தி.மு.க.,வை தன்பக்கம் இழுத்தார்.இதன் பயனாக, 2006 சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் என, இரண்டே கட்சிகளின் துணையுடன் போட்டியிட்ட அ.தி.மு.க., அணி, 69 தொகுதிகளைக் கைப்பற்றியது.ஆனால், காங்.,- பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் என பெரிய பட்டியல் இருந்தும், மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தும், அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு இருந்தும், தி.மு.க.,வால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை; 99 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது; கூட்டணிக்கு 163 தொகுதிகள் கிடைத்தன.

"தி.மு.க., அணியின் அபார வெற்றி நிச்சயம்' எனக் கருதப்பட்ட நிலையில், தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இல்லாத அளவு வலுவான எதிர்க்கட்சியாக, 2006ல் அ.தி.மு.க., அமர்ந்தது. தேர்தல் சமன்பாடுகள் மாறியதற்கு, முந்தைய ஆண்டு துவக்கப்பட்ட, விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் முக்கிய காரணமாக அமைந்தது.எதிர்பாராத எழுச்சியாகக் கிளம்பிய இந்தக் கட்சி, 105க்கும் மேற்பட்ட தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கும் அதிகமாகப் பெற்றது. கிட்டத்தட்ட, இதே அளவு தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கும் குறைவான வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க., அணி தோற்றது."அ.தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சியையே பிடித்திருக்கலாம்' என்ற பேச்சு, அப்போதே எழுந்தது.

அடுத்து வந்த 2009 லோக்சபா தேர்தலும் இதையே நிரூபித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாத அ.தி.மு.க., அணி, இம்முறை 12 தொகுதிகளைக் கைப்பற்றியது. இத்தனைக்கும், தி.மு.க., அணியில் இருந்து, அ.தி.மு.க., அணிக்குத் தாவியிருந்த பா.ம.க.,வின் ஓட்டு வங்கி, அ.தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வன்னியர்களின் கோட்டையான ஏழு தொகுதிகளில் அந்தக் கட்சியே போட்டியிட்டிருந்தது.மறுபக்கம், அதே 2009 தேர்தலில், 39 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட 168 சட்டசபை தொகுதிகளில் தே.மு.தி.க., 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றிருந்தது. இவற்றுள், 29 தொகுதிகளில், 20 ஆயிரத்துக்கும் அதிகமாக ஓட்டுகளைக் குவித்திருந்தது.

இதில் பெரும்பாலான தொகுதிகள், வடமாவட்டங்களைச் சேர்ந்தவை.அந்த வகையில், அ.தி.மு.க., அணியில் இருந்து விலகி, தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேர்வதால் ஏற்படும் ஓட்டிழப்பை, தே.மு.தி.க.,வை சேர்த்துக்கொள்வதன் மூலம், சுலபமாக ஈடுகட்டிவிடும்.மேலும், 2004 லோக்சபா தேர்தலில், 57.40 சதவீத ஓட்டுகளை வைத்திருந்த தி.மு.க., அணி, தொடர்ந்து சரிவுகளையே சந்தித்து வந்திருக்கிறது. 2006 சட்டசபைத் தேர்தலில் இந்த அணியின் ஓட்டுகள், 44.69 சதவீதமாக குறைந்தன. முன்னமே சொன்னது போல, 2009லும் 12 தொகுதிகளை இழந்திருக்கிறது.மே மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் பூதம் உள்ளிட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இருந்தாலும், ஆள் பலம், பண பலம், அரசு எந்திரம், வென்றாக வேண்டிய நிர்பந்தம் என, முழு மூச்சுடன் களமிறங்கும் ஆளுங்கூட்டணியை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதை, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா உணர்ந்தே இருக்கிறார்.அதனால் தான், செல்லும் இடமெல்லாம், "நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என, உறுதியளித்து வருகிறார்."காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என்றான நிலையில், குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கியோடு கூட்டணியில் சேரத்தக்க கட்சி, தே.மு.தி.க.,வைத் தவிர வேறில்லை.

பூர்வாங்க பேச்சுக்கள் சுமுகமாக முடிந்துவிட்டதை, இரு கட்சி வட்டாரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பத்திரிகை விளம்பரம் பற்றி, விஜயகாந்த் பதறியடித்துக் கொடுத்த விளக்கமும், தொண்டர்களுக்கு அ.தி.மு.க., தலைமை விடுத்துள்ள உத்தரவும், இதற்கான உதாரணங்கள்."தடாலடி நடவடிக்கைகளுக்குப் பேர் போன எங்கள் தலைவி, தயங்கி நின்றதாக சரித்திரம் இல்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், ஆணித்தரமாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். அடுத்து வரும் அறிவிப்புகள் அதை நிரூபிக்கும்' என, நம்பிக்கையோடு சொல்கிறார், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர்.

No comments:

Post a Comment