Friday, January 21, 2011

விராத் கோஹ்லி ஆட்டம் வீண்


போர்ட் எலிசபெத்: நான்காவது ஒரு நாள் போட்டியில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் "டக்வொர்த் -லீவிஸ்' விதிமுறைப்படி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 87 ரன்கள் விளாசிய விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய அணி
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று போர்ட் எலிசபெத்தில், நான்காவது போட்டி நடந்தது.
விஜய் நீக்கம்:
இந்திய அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டு, பார்த்திவ் படேல் வாய்ப்பு பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் இங்கிராம், பார்னலுக்கு பதிலாக வான் விக், ராபின் பீட்டர்சன் இடம் பெற்றனர். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, ஸ்மித் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதலில் அடக்கி வாசித்த ஆம்லா, போகப் போக அதிரடி காட்டினார். முனாப் படேல் வீசிய போட்டியின் 8வது ஓவரில் வரிசையாக மூன்று பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், நெஹ்ரா பந்தில் ஹர்பஜனின் அருமையான "கேட்ச்சில்' ஸ்மித்(18) வெளியேறினார்.
விக்கெட் சரிவு:
இதற்கு பின் இந்தியாவின் ஆதிக்கம் ஆரம்பமானது. தென் ஆப்ரிக்க விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. வான்விக்(15), யுவராஜ் சுழலில் வீழ்ந்தார். அரைசதம் கடந்த ஆம்லா(64) ரன் அவுட்டானார்.
எப்படி அவுட்?:
பின் யுவராஜ் பந்தில் டிவிலியர்ஸ்(3)குழப்பமான முறையில் அவுட்டானார். இம்முறை பந்தை "கேட்ச்' செய்த தோனி, பின் "ஸ்டம்பிங்கும்' செய்தார். "ரீப்ளே' பார்த்த போது, பந்து பேட்டில் படவில்லை. எனவே, "ஸ்டம்பிங்' தான் சரியானதாக இருந்தது. ஆனால், "கேட்ச்' அடிப்படையில் அம்பயர் சைமன் டாபெல் "அவுட்' கொடுத்தார். பிளசிஸ்(1) ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
டுமினி அபாரம்:
 பின் டுமினி, போத்தா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். யுவராஜ் பந்தில் போத்தா(44) அவுட்டானார். அடுத்து வந்த ராபின் பீட்டர்சன் 31 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆடிய டுமினி அரைசதம் கடந்தார். இவர், முனாப் வீசிய கடைசி ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. டுமினி(71), ஸ்டைன்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் யுவராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
திணறல் துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். டிசோட்சபே வேகத்தில் ரோகித் சர்மா(1) வெளியேறினார். படுநிதானமாக ஆடிய பார்த்திவ் படேல்(11), அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. போத்தா பந்தில் ஒரு சிக்சர் அடித்த யுவராஜ்(12), அதே ஓவரில் ஸ்மித்தின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். ரெய்னா(20), தோனி(2) சொதப்பினர். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய யூசுப் பதான், இம்முறை 2 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார்.
மழை குறுக்கீடு:
இந்திய அணி 31.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் ஆட்டம் துவங்கிய போது, 46 ஓவரில் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 32.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. விராத் கோஹ்லி(87), ஹர்பஜன்(3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டத்தை தொடர வாய்ப்பு இல்லாததால், "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி தென் ஆப்ரிக்க அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, தொடரில் 2-2 என சமநிலையை எட்டியது.
ஆட்ட நாயகன் விருதை டுமினி வென்றார்.

----------------------


அதிவேக "2000'
நேற்று தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா 24வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவர் 41 போட்டியில் பங்கேற்று இச்சாதனை படைத்தார். இப்பட்டியலில் ஜாகிர் அபாஸ்(பாக்.,) இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 45 போட்டியில் பங்கேற்று இச்சாதனை படைத்தார்.
---
எட்டு பவுலர்கள்நேற்று இந்திய அணியில் எட்டு பேர் பந்துவீசினர். கேப்டன் தோனி, பார்த்திவ் படேல், விராத் கோஹ்லி மூவர் மட்டும் பந்துவீசவில்லை. ஜாகிர், முனாப், நெஹ்ரா, ஹர்பஜன் உள்ளிட்ட முழுநேர பவுலர்கள் தவிர, யுவராஜ், யூசுப் பதான், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பகுதிநேர பந்துவீச்சாளர்களும் பவுலிங் செய்தனர்.
---
"கீப்பர்' பார்த்திவ்ஆட்டத்தின் 45வது ஓவரின் போது கேப்டன் தோனி, விக்கெட் கீப்பர் பணியை பார்த்திவ் படேலிடம் வழங்கினார். பயிற்சியின் போது தோனி லேசான காயமடைந்ததால், சற்று ஓய்வெடுக்க இம்முடிவை எடுத்திருக்கலாம். உலக கோப்பை தொடருக்கு மாற்று விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படாத நிலையில், இதுபோன்ற எதிர்பாராத சம்பவத்தின் போது தோனி என்ன செய்வார் என்ற கேள்வி தற்போது உருவாகி உள்ளது.


ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்காஆம்லா -ரன் அவுட்-(கோஹ்லி/தோனி) 64(69)
ஸ்மித்(கே)ஹர்பஜன்(ப)நெஹ்ரா 18(30)
வான் விக்(கே)கோஹ்லி(ப)யுவராஜ் 15(22)
டிவிலியர்ஸ்(கே)தோனி(ப)யுவராஜ் 3(5)
டுமினி -அவுட் இல்லை- 71(72)
பிளசிஸ் -ரன் அவுட்-(கோஹ்லி/தோனி) 1(4)
போத்தா(ஸ்டெம்)தோனி (ப)யுவராஜ் 44(59)
பீட்டர்சன் -ரன் அவுட்-(யூசுப்/ஹர்பஜன்) 31(35)
ஸ்டைன் -அவுட் இல்லை- 4(6)
உதிரிகள் 14
மொத்தம் (50 ஒவரில், 7 விக்.,) 265
விக்கெட் வீழ்ச்சி: 1-57(ஸ்மித்), 2-106(வான் விக்), 3-111(ஆம்லா), 4-115(டிவிலியர்ஸ்), 5-118(பிளசிஸ்), 6-188(போத்தா), 7-242(பீட்டர்சன்).
பந்துவீச்சு: ஜாகிர் 9-1-55-0, முனாப் 8-1-49-0, நெஹ்ரா 6-0-27-1, ஹர்பஜன் 10-0-61-0, யுவராஜ் 8-0-34-3, ரோகித் 2-0-6-0, ரெய்னா 3-0-13-0, யூசுப் 4-0-18-0.
இந்தியா
ரோகித்(கே)டுமினி(ப)டிசோட்சபே 1(6)
பார்த்திவ் எல்.பி.டபிள்யு.,(ப)டிசோட்சபே 11(24)
கோஹ்லி-அவுட் இல்லை-- 87(92)
யுவராஜ்(கே)ஸ்மித்(ப)போத்தா 12(20)
ரெய்னா(ஸ்டம்)டிவிலியர்ஸ்(ப)பீட்டர்சன் 20(36)
தோனி(கே)பிளசிஸ்(ப)பீட்டர்சன் 2(8)
யூசுப்(கே)டிவிலியர்ஸ்(ப)மார்கல் 2(3)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 3(8)
உதிரிகள் 4
மொத்தம்(32.5 ஓவரில் 6 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ரோகித்), 2-32(பார்த்திவ்), 3-49(யுவராஜ்), 4-112(ரெய்னா), 5-123(தோனி), 6-128(யூசுப்).
பந்துவீச்சு: ஸ்டைன் 4-0-15-0, டிசோட்சபே 6-1-25-2, மார்கல் 6-1-13-1, போத்தா 6.5-0-27-1, பீட்டர்சன் 8-0-46-2, பிளசிஸ் 1-0-5-0, டுமினி 1-0-9-0.(dinamalar)

No comments:

Post a Comment