Saturday, January 8, 2011

கூட்டணி உருவாகாமல் இருக்க.சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்


எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்."மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த
விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதில், கட்சி நிர்வாகிகள் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் சில விளம்பரங்கள் வெளிவந்துள்ளதாக விஜயகாந்த் நேற்று திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:சேலத்தில் தே.மு.தி.க., சார்பில் நடக்கும் மாநாட்டை ஒட்டி, கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து வருகின்றனர். தமிழகத்தில், நடந்து வரும் மோசமான கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், 7ம் தேதி (நேற்று முன்தினம்), மாலை நாளிதழ் ஒன்றில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கும், அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஏற்கனவே ஊழலில் திளைக்கும், ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு நச்சு நினைப்போடு, இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நயவஞ்சக நரிகளுக்கு சரியான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்ட உள்ளனர்.

இந்த விஷமிகள் வேண்டும் என்றே வெளியிட்ட விளம்பரத்தை, அந்த பத்திரிகை ஏன் வெளியிட்டது என எங்களுக்கு புரியவில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகளான, கட்சி கொள்கை பரப்பு செயலர் வி.சி. சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகப் பகுதி செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில், இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால், இந்த அற்ப காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், இதை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த அணி அமையாமல் இருக்க ஆளுங்கட்சி சதி செய்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி.மு.க., ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது' என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சியின் நிலை என்ன என்பதையும் மாநாட்டுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

No comments:

Post a Comment