Saturday, February 26, 2011

அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும், சாலைப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். தி.மு.க. அரசு உண்ணாவிரதம் இருந்த சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசவில்லை. சங்கங்களின் பிரதிநிதிகள் செய்வதறியாமல் முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்கு புதிய தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து புறப்பட்டனர்.

ஊர்வலமாக வந்த அரசு ஊழியர்கள் புதிய தலைமை செயலக நுழைவு வாயில் அருகில் வந்தவுடன் சற்றும் எதிர்பாராத வகையில் அவர்களை காவல்துறையினர் மறித்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் பலர் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியுள்ளனர். சிலருக்கு மண்டை உடைந்துள்ளது. மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

காவல்துறையின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலினால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. அரசு ஊழியர்கள் பலரையும், நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜனநாயகத்தில் எந்தத் தரப்பினரும் அரசின் முன் கோரிக்கைகளை வைத்து அதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இயற்கை. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை அரசிடம் சொல்லாமல் வேறு எங்கு போய் சொல்வது. அவர்கள் வேறு வழியின்றி கோட்டைக்கு நேரில் வந்து தி.மு.க. அரசை சந்தித்து மனு கொடுக்க வந்தபோது அவர்களை காவல்துறையினரைக் கொண்டு கண்டபடி தாக்கியிருப்பது இந்த அரசின் ஆணவப் போக்கையே காட்டுகிறது.

தி.மு.க. அரசின் இந்த அணுகுமுறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

படித்தவர்கள் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள் என்றும், அவர்களை போலீஸார் தடுத்து அனுப்பினார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். இது போதாதென்று படித்தால் மட்டும் போதாது என்றும், பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் என்றும் முதல்வர் பேசியிருப்பது அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களது படிப்பையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.

இத்தகைய சர்வாதிகாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் மக்கள் தகுந்த பாடத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு வரும் தேர்தலில் புகட்டுவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment