Saturday, February 26, 2011

அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?




தேமுதிக தனது நிலையை தெளிவாக்கிவிட்ட நிலையில், திமுக அணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் அந்த அணியில் இருந்து வெளியேறி திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தது.
அதன்பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் வெற்றி
பெற்றார்.
வர இருக்கும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்கிறது என்று தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் இதே அணியில் இருக்குமா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் திமுக அணியில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு இணையாகத் தங்களுக்கும் மரியாதையான எண்ணிக்கையில் திமுக அணியில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்க்கிறது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறும் அளவுக்கு கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியின் கோரிக்கை.
காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல குறைந்தது 15 தொகுதிகளைத் தி.மு.க.வால் தர முடியுமா என்பது சந்தேகம்தான்.
பா.ம.க.வுடன் சேர்ந்து திமுக அணியில் தேர்தலைச் சந்தித்தால், தங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய லாபம் எதுவும் இருக்காது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களின் பரவலான கருத்தாக உள்ளது.
மேலும் ஆளும் திமுக கூட்டணியில் இருந்தும், தங்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சில முக்கிய நியமனப் பதவிகளுக்கு திருமாவளவனின் பரிந்துரையை ஏற்காததும் தங்களின் அதிருப்திக்குக் காரணம் என அவர்கள் பட்டியலிடுகின்றனர்.
1998-ல் ராஜீவ் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினராக இருந்த போதும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் அமைச்சர் பதவியை அதிமுக தலைமை வாங்கிக் கொடுத்ததுபோல இந்த முறை தொல். திருமாவளவனுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இணையமைச்சர் பதவி கூட திமுக வாங்கித் தரவில்லை என்கிற மனக்குறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது.
மேலும், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் நிலைப்பாடு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிப்பதிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தயக்கம் காணப்படுகிறது.
தொண்டர்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அப்படி பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இருந்து செயல்படுவதாக இருந்தால், இரண்டு கட்சியின் வாக்கு வங்கியிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, அது அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு சாதகமாகி விடலாம் என்று கணிக்கிறார்கள். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படுமென்று அந்தக் கட்சித் தொண்டர்களே பயப்படுவதாகத் தெரிகிறது.
"திமுகவில் எங்களுக்கு கெüரவமான இடங்கள் தரப்படாத நிலை ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? தேமுதிகவும் இணைந்து விட்டநிலையில் அதிமுக அணி பலமடைந்து இருக்கிறது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அந்த அணியில் வெற்றி உறுதி பெறும்போது, இங்கே திமுக அணியில் குறைந்த இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?
எங்களுக்கு 15 இடங்கள் தருவதால் திமுக அணிதான் பலப்படுமே தவிர அதனால் நாங்கள் அடையும் பலன், குறைந்த இடங்களில் அதிமுக அணியில் போட்டியிடுவதால் கிடைக்கும் வெற்றிக்குத்தான் சமமாக இருக்கும்' என்கிறார் தொல்.திருமாவளவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி ஒருவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிமுக அணியில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்விக்கு, தங்களுக்கு "தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற சமிக்ஞை வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அணி மாறுமா சிறுத்தை என்பது அதற்கு இங்கே தரப்படும் இரை (இடங்கள்) எவ்வளவு என்பதைத் பொறுத்து அமையும்(dinamani
)

No comments:

Post a Comment