Monday, February 14, 2011

வதந்திகளை நம்பாதீர்கள்





கௌதம்மேனனின் "நடுநிசி நாய்கள்' அனுபவம் எப்படி?


இது எனக்கு முக்கியமான படம். கதையை கேட்காமலேயே கௌதம் மீதிருந்த நம்பிக்கையில் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டேன். ஷூட்டிங் ஆரம்பித்த இரண்டு நாள்களில் கௌதம் மேனனைத் தனியாக அழைத்து அவருக்கு நன்றி சொன்னேன். ""எதற்கு இது எல்லாம்'' என்றார். ""இந்தப் படத்தில் நடிக்க என்னை அழைத்ததற்கு'' என்றேன். மௌனமாகப் புன்னகைத்தார்.

இந்திய சினிமாவில் இந்தப் படம் முக்கிய இடத்தைப் பிடிக்கும். சைக்கோ திரில்லர் கதை. ஒரு உண்மை சம்பவத்தின் கருவை எடுத்துத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நல்லவர்களையும், கெட்டவர்களையும் இந்த சமுதாயம் எப்படி ஏற்றுக் கொள்கிறது. எல்லோருக்கும் கெட்டவராக தெரிகிற ஒரு நபர் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பார்.

இந்த முரண்பாடுதான் கதை. மனிதனின் மனநிலைதான் திரைக்கதை. திரைக்கதை ஆரம்பிக்கும் போதே கதையைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதையும் கடந்து சஸ்பென்ஸ் இருக்கிறது. கௌதம் ஸ்டைலில் இருந்து கொஞ்சமும் விலகாது. உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். பார்த்து விட்டு அனுபவத்தைச் சொல்லுங்கள்.

அதென்ன "நடுநிசி நாய்கள்'?

தொடக்கத்தில் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. கௌதம் சொன்ன பிறகு தெரிந்து கொண்டேன். சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்தில் மாதவி வீட்டுக்குக் கோவலன் போகும் போது கண்ணகி ஒரு கனவு காணுவாராம். அந்த கனவில் நாய்கள் வருமாம். நள்ளிரவு கனவில் நாய்கள் வந்தால் அது கெட்ட சொப்பனமாம். அதே போல் இந்தக் கதையும் நள்ளிரவு நேரங்களில்தான் நடக்கிறது.

ஹிந்தி படங்களை விட மற்ற மொழிகளில் நீங்கள் நடிக்கும் படங்கள்தான் வெற்றி பெறுகிறதாமே?

யாருங்க இதெல்லாம் உங்களிடம் சொல்லுவது? அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற மொழி சினிமாக்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ஹிந்தியில் அதிக சினிமாக்களில் நடித்து விட்டதால் அப்படித் தோன்றுகிறது. தமிழில் நான் நடித்த "அசல்' சரியாக ஓடவில்லை. அப்படியென்றால் நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழில் கௌதம்மேனனின் படங்களை மட்டும்தான் பார்ப்பீர்களாமே?

கௌதம்மேனனின் சினிமா எனக்குப் புதிதாகத் தெரிந்தது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் அவர். அவருடைய படங்களில் எனக்கு கிடைக்கும் தொடர் வாய்ப்புகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். சமீபத்தில் "விண்ணைத்தாண்டி வருவாயா' பார்த்தேன். அந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. லிங்குசாமியின் "பையா' பார்த்தேன்.

நல்ல படம். மற்ற சினிமாக்களைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. கௌதம்மேனனின் படங்களில் மட்டும்தான் நடிப்பதாகவும் சொன்னார்கள். இப்போது லிங்குசாமியின் "வேட்டை', பிரபுதேவா இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்கிறேன். போதுமா இந்தப் புள்ளி விவரங்கள்? இப்போது நான் கௌதம்மேனனின் படங்களை மட்டும்தான் பார்ப்பேன் என்கிற வதந்தி பொய்தானே?

காதலர் தினம் வருகிறது உங்கள் காதல் பற்றி சொல்லுங்கள்?

இப்போதைக்கு எதுவும் இல்லை. காதலர் தின ஸ்பெஷல் என எதுவும் சொல்வதற்கில்லை. காதலிப்பவர்கள் கொண்டாட வேண்டிய நாள் அது. காதல் ஒரு நல்ல விஷயம். எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த அனுபவம் கிடைக்கவில்லை. ஒரு வேளை அடுத்த காதலர் தினத்தில் அது நடந்தால் ஸ்பெஷல் பேட்டி தருகிறேன்.
நன்றி சமீரா. அடுத்த காதலர் தினத்தில் உங்கள் சிறப்பு பேட்டிக்காக காத்திருக்கிறோம்.(dinamani)

No comments:

Post a Comment