Friday, April 22, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு சிக்கல்: நாளை மறுநாள் 2வது குற்றப்பத்திரிகை


 "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையை நாளை மறுநாள், சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்கிறது. இதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக நடந்த பணப் பரிமாற்றங்கள் வெளிச்சத்துக்கு வரும் எனத் தெரிகிறது. இதில் ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தியவர்கள் எல்லாம் இடம் பெற
உள்ளனர். இதனால், தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் தி.மு.க.,வுக்கு, இரண்டாவது குற்றப் பத்திரிகையால் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, 17 மாதங்களாக நடத்திய விசாரணைக்கு பின், சி.பி.ஐ., தன் முதல் குற்றப்பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜா மீது சதி செய்தது, போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி செய்தல், ஊழலில் ஈடுபட்டது மற்றும் அரசு அலுவலகத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப்பத்திரிகையை நாளை மறு நாள் தாக்கல் செய்ய உள்ளது. இதில் பலரது பெயர்கள் இடம் ö பறும் என்பது தான் பரபரப்புக்கு காரணம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் போன்ற விவரங்களை சேகரித்து தரப்படும் என்றும் சி.பி.ஐ., ஏற்கனவே உறுதியளித்தது. சினியுக் பிலிம்ஸ், கிரீன் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், கலைஞர் "டிவி' பிரைவேட் லிமிடெட், போன்ற நிறுவனங்களிடம் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ., பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இது குறித்த வெளிநாட்டுத் தொடர்பு, பணப் பரிமாற்றமும் ஆய்வு செய்யப்பட்டன. "2 ஜி' ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது. சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி' தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பரிமாற்றத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடந்த விஷயங்களையெல்லாம் தொகுத்து யார், யாரெல்லாம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஏற்கனவே முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மற்றும் கனிமொழி எம்.பி.,யிடம் நடத்தப்பபட்ட விசாரணை விவரங்களும், குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி'யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்டைச் சேர்ந்த ஆசிப் பல்வா, இணை உரிமையாளரான ராஜீவ் அகர்வால் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் தாவன் சினியுக் நிறுவனத்துடன் தொடர்பு உடையவர்கள். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களும், குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது. அதனால், தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் தி.மு.க.,வுக்கு, இரண்டாவது குற்றப்பத்திரிகை சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.dinamalar

No comments:

Post a Comment