Saturday, April 16, 2011

கொளத்தூர் தொகுதியில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன?


தேர்தல் கமிஷனின் கண்டிப்பையும் மீறிய பண பட்டுவாடா, ஆளும் கட்சிக்குரிய பலத்துடன் கூடிய பரபரப்பான பிரசாரம் என, ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிற்கும் ஆளான கொளத்தூர் தொகுதியில், தேர்தல் நாளன்று நடுத்தர மற்றும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மதிய உணவு வேளைக்குப் பின்,
திடீரென படை எடுத்து தங்களது ஓட்டுகளை தவறாமல் கவனத்துடன் பதிவு செய்தது, தொகுதியின் இதர தரப்பு மக்களையும், பத்திரிகையாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

கொளத்தூர் தொகுதி புதிதாக உருவானது என்றாலும், ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பை பெறவில்லை. சில மாதங்களுக்கு முன், அத்தொகுதி நிலை குறித்த விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்ட போது, முதல்வர் கருணாநிதி போட்டியிடப் போகிறார் என்று கூறப்பட்டது. அதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த அ.தி.மு.க.,வும் கொளத்தூர் மீது கவனம் செலுத்த தொடங்கியது. அதனால், அக்கட்சியின் வடசென்னை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர், கருணாநிதி அங்கு போட்டியிடப் போவதில்லை என்று உறுதியானது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியானதும், அ.தி.மு.க., தரப்பில் அத்தொகுதியை யாருக்கு கொடுப்பது என்பது முடிவாகாமல் இருந்தது. இறுதியாக, அத்தொகுதியை தனது பட்டியலில் சேர்த்த அ.தி.மு.க., ஸ்டாலினுக்கு இணையான வேட்பாளராக, சைதை துரைசாமியை அறிவித்தது. இவர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அதன் பின் கட்சியின் நம்பிக்கையாளராக, நாகரிகமான அரசியல்வாதியாக இருந்தார். தமிழக மாணவர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் கல்விக்கான வழிகாட்டும் கல்வியாளராக செயல்பட்டார்.

"தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தன்னை தேர்ந்தெடுத்தால் ஐ.ஏ.எஸ்., அகடமி உருவாக்கி தொகுதி மாணவ, மாணவியரின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன்' என்று உறுதி அளித்தார். அவருக்கு ஆதரவாக, மனிதநேய அறக்கட்டளை மாணவர் மன்றத்தினர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள் பிரசாரம் மேற்கொண்டது, ஒட்டுமொத்த பெற்றோரையும் யோசிக்க வைத்தது. இந்நிலையில், ஓட்டுப் பதிவன்று ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணைத் தூவ முடியாது என்று வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் ஓட்டு போட்ட ஸ்டாலின், நேரடியாக கொளத்தூர் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு காலை முதல் மாலை வரை இருமுறை வலம் வந்தார். மதிய உணவிற்குப் பிறகு, நடுத்தர மற்றும் வசதியான படித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அணி அணியாக ஓட்டுச் சாவடிகளுக்கு படை எடுத்தனர்.

விலைவாசி உயர்வு, கல்விக் கட்டணம், மின் தடை, கடந்த காலங்களில் கிடைத்த கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் ஆகியவை பிரசாரத்தில் முக்கிய இடம்பெற்றிருந்தன. இந்த பின்னணியில் பெண்கள் அதிக அளவு ஓட்டுச்சாவடிக்கு வந்ததை அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றனர். தொகுதியில் உள்ள மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 924 ஓட்டுகளில், 1 லட்சத்து 41 ஆயிரத்து 906 ஓட்டுகள் (68.25) பதிவாகின. ஆறு வார்டுகளை கொண்ட கொளத்தூரின் முந்தைய தேர்தல்களின் நிலவரப்படி 40 முதல் 45 சதவீதமே அதிகபட்சமாக இருந்தது. அதனால், 68 சதவீதத்தில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி வித்தியாசம், "நூலிழை'யில் தான் என்பது, மே 13ம் தேதி தெரியும்.

1 comment:

  1. the peoples wave in this election is against D.M.K. most of the people want A.D.M.K to rule. but lot of people afraid to the illegal power of DMK alliance. people doubts election commission. the 30 days time is advantage to DMK alliance. stalin is the corruption party leader son. saidai duraisamy is a kind person. do lot for people. if duraisamy wins people expects good things from his ruling power. the statistics of peoples power shows stalin lose in this election. duraisamy wins.

    ReplyDelete