Tuesday, November 29, 2011

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

 மக்கள்நல பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 13500 பேரை தமிழக அரசு சமீபத்தில் அதிரடியாக  டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்
சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நல பணியாளர்கள் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை  விதித்தார்.
அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

அப்பீல் மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்; விசாரணைக்கு பின் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி சுகுணா இறுதி விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பும் கூறினர். தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த  இந்த உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

 இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயின், தேவ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, மக்கள் நல பணியாளர்கள் சார்பாக மூத்த வக்கீல் அந்திஅர்ஜீனா ஆஜராகி, திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை பணி நீக்கம் செய்தனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை மீண்டும் அதிமுக அரசு நீக்கியது. இதுபோல பல முறை நடந்தது.

 தற்போதும் 13ஆயிரத்து 500 பேரை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்தது. அவர்களுக்கு முன் கூட்டி நோட்டீசு கொடுக்கவில்லை. அவர்களிடம் கருத்து கேட்கவில்லை, ஒரே உத்தரவில் மக்கள் நல பணியாளர்களை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்தது சட்டவிரோதமானது. எனவே அரசு மேல்முறையீடு மனுவில் எந்த தடையும் விதிக்க கூடாது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு வக்கீல் குருகிருஷ்ணகுமாரை பார்த்து, தமிழகத்தில் ஒரு ஆட்சியில் மக்கள் நல பணியாளர்களை நியமிக்கப்பட்டனர்,

 மற்றொரு ஆட்சி வந்ததும் அவர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டனர். இதுதான் கடந்த பல ஆண்டுகளாக நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஏன் இந்த நிலை தமிழகத்தில் உள்ளது. இதை கண்டிக்கிறோம், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? என்றனர்.இதை கேட்ட தமிழகஅரசு வக்கீல் குருகிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர்கள் வழக்கு விசாரணை நடந்து வருவதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா நேற்று மக்கள் நல பணியாளர்கள் வழக்கை விசாரித்தார். அப்போது மக்கள் நல பணியாளர்கள் சார்பாக வக்கீல்கள் வைகை, சந்திரகுமார் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முடித்தனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, மக்கள் நல பணியாளர்கள் தற்காலிக பணியாளர்கள் தான் அவர்களை பணி நீக்கம் செய்தது சரியானது தான். அதற்கு தடை விதிக்க முடியாது என்று விரிவாக வாதாடினார். இதை தொடர்ந்து இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் தனது வாதத்தை தொடர அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை 1ம் தேதிக்கு நீதிபதி சுகுணா தள்ளிவைத்தார்.

1. 13,500 மக்கள்நல பணியாளர்கள் திடீர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
2. ஐகோர்ட்டில் அப்பீல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது தமிழக அரசு.
3. ‘சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா’ என்றும் நீதிபதிகள் கேள்வி  எழுப்பினர்.

No comments:

Post a Comment