Monday, November 28, 2011

பெண்களை இரவில் கைது செய்யக் கூடாது என்று தெரிந்தும் கைது செய்தது ஏன்?- விஜயகாந்த் கேள்வி

 பெண்களை இரவில் கைது செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதை விழுப்புரம் மாவட்ட போலீஸார் செய்தது ஏன். பெண் காவலர்களை அப்போது உடன் வைத்துக் கொள்ளாதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் அருகே தி. மண்டபம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குன்றின் மீது குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

விழுப்புரம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடந்த திருட்டு சம்பந்தமாக சென்ற வாரம் தாலுக்கா காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் கிராமத்தில் வசிக்கின்ற காசி என்பவரை கைது செய்து ஒரு லாட்ஜில் வைத்து விசாரணை செய்தார்கள். இதுபற்றி விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் அவர்களை விசாரிக்க சொன்னேன். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரங்கள் எனக்குத் தெரிய வந்தன.

இந்த வழக்கில் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கைது செய்ய திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் அந்த வீட்டுக்குச் சென்று, அந்த வீட்டில் உள்ள குடும்பப் பெண்களான ராதிகா, லட்சுமி, வைகேளிவரி, கார்த்திகா ஆகியோரை கைது செய்து மாலை 7 மணி அளவில் வேனில் ஏற்றினர்.

நான்கு காவலரை அவர்கள் வீட்டுக்கு காவல் இருக்க வைத்து விட்டு, அங்கிருந்து ஆய்வாளரும், சில காவலர்களும் அவர்களை திருக்கோவிலூர் காவல் நிலையம் அருகே அழைத்து வரும்பொழுது, காவல் நிலையத்தின் அருகே ஆய்வாளர் இறங்கிக் கொண்டு திருவண்ணாமலை சாலையில் ஒரு ஓட்டல் அருகே இவர்களை நிற்கச் சொல்லுகிறார்.

22ம் தேதி இரவு முழுவதும் தைல மரக்காட்டில் வைத்து இந்தப் பெண்கள் நான்கு காவலர்களால் கற்பழிப்புக்கு ஆளாக்கியுள்ளதாக அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் துறையினரின் கொடூரமான இச்செயலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதற்கிடையில் அந்தக் குடிசைக்கு வந்த ஆண்களை காவலர்கள் தந்த தகவலின் பேரில் ஆய்வாளர் அவர்களைக் கைது செய்து திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார். காசியை அழைத்துச் சென்று அவர் வீட்டில் சோதனை செய்தபொழுது எந்தப் பொருளும் சிக்கவில்லை. விழுப்புரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமாக, விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய குற்றப் பிரிவு போலீசார் இவர்களைக் கைது செய்யாமல் திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் கைது செய்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

பெண்களை இரவில் கைது செய்யக் கூடாது என்று தெரிந்தும் அவர்களை இரவில் கைது செய்தது ஏன்? ஏன் பெண் காவலர்களை உடன் அழைத்துச் செல்லவில்லை? 22.11.2011 அன்று நடந்த சம்பவத்தில் இன்று வரை தாமதம் செய்வதின் காரணம் என்ன? பாதிக்கப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்துவது ஏன்? யார் குற்றவாளி என்று திருக்கோவிலூர் ஆய்வாளரை விசாரித்தால் தெரியும் அல்லவா? சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டிய காவல் துறையே சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது என்ன நியாயம்? 

புலன் விசாரணை நியாயமாக நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர்களை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏதுமறியாத அப்பாவி மக்களை தங்கள் விருப்பம் போல் கைது செய்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சர்வாதிகாரமாக நடக்கும் காவல் துறையின் போக்கும் கண்டிக்கத்தக்கதாகும் என்று அவர் சாடியுள்ளார்.(thanks thatstamil.com)

No comments:

Post a Comment