Monday, December 5, 2011

புதிய தலைமுறை கட்டுரை உங்கள் பார்வைக்கு


இலவசத்தின் விலை இதுதான்!
மாலன்

கிடுகிடுவென்று ஏறிய பெட்ரோல் விலை கொஞ்சம் இறங்கியதாக வந்த செய்தி உண்மைதானா இல்லை, மனப் பிரமையா என்று கொஞ்சம் திகைப்போடு புன்னகைக்கலாமா, என அரைத் தயக்கத்தில் இருந்த மக்கள் தலையில் ‘மடேர்’ என வந்திறங்கியது தமிழக அரசின் அணுகுண்டு அறிவிப்பு.

தவிர்க்க முடியாத அன்றாடத் தேவைகளாகி விட்ட பால், போக்குவரத்து இவற்றுக்கான விலை/கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கும் வந்து விட்டன. அடுத்தாற்போல மின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ‘அதிகாரப்பூர்வமற்ற’ அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

நினைத்து நினைத்துப் பெய்யும் சென்னை மழையைப்போல, அவ்வப்போது ஏறும் பெட்ரோல் விலையோடு இந்த விலை உயர்வுகளையும் சேர்த்துப் பார்த்தால்  ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இதுவரை செலவழித்ததை விட அதிகமாகச் செலவழிக்க நேரிடும், அடித்தள மக்களின் வாழ்க்கை அதைவிட அபாயகரமான விளிம்பிற்குச் செல்கிறது. இதைச் சமாளிக்க அவர்கள் ஒன்று, தங்களது சேமிப்பைக் கைவிட வேண்டும் அல்லது பால் போன்ற ஊட்டச் சத்துக்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.  சென்னையில் வசிக்கும் ஆண்டனி  என்ற தினக்கூலி, "இதுவரைக்கும் பேருந்துக் கட்டணமா மாதம் ஐநூறு ரூபாய்தான் செலவு செய்துக்கிட்டு இருந்தோம். ஆனா, இப்ப அதுவே ஆயிரம் ரூபாய் ஆகிடுச்சி. எல்லா விலையையும் இருமடங்கு ஆக்கிட்டாங்க" எனப் பொருமுகிறார். வசந்தி என்ற குடும்பத்தலைவி (சென்னை), "முன்னாடி பால் விலை ஏறியபொழுது ஒரு லிட்டர் வாங்கிக்கிட்டு இருந்ததை அரை லிட்டரா வாங்கி சமாளிச்சி வந்தோம். இப்ப அரை லிட்டர் கூட வாங்க முடியாத விலை விக்குது. ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் ஏற்றி இருந்தால் கூட சமாளிச்சி இருப்போம். ஆனா,ஆறு ரூபாய் ஏத்துனதுதான் அதிர்ச்சியா இருக்கு" என்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் பின்னோக்கிச் சறுக்குகிறது.
மற்ற மாநிலங்களில் பால் விலை மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கேயும் நிலைமை நமக்கு நிகராக அல்லது நம்மை விட அதிகமாக இருக்கின்றன (காண்க: பெட்டிச் செய்தி).‘காலுக்குச் செருப்பில்லை எனக் கவலைப்படுகிறாயே, காலே இல்லாதவனை நினைத்துப் பார்’ எனத் தத்துவம் பேசுகிறவர்களுக்கு இது ஆறுதல் தரலாம்.  ஆனால், நடைமுறை வாழ்க்கை நிஜங்கள் நம்மைக் கிள்ளிக்கொண்டே இருக்கும்.  இந்த விலை உயர்வைத் தாண்டிக் கவலைப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

பெட்டிச் செய்தி

































முதல்வரே அதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆவின், மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், ‘மரணப்படுக்கையில்’ இருப்பதாக அவர் கூறுகிறார். "இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும் செயலிழந்து போய்விடும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படி நலிந்ததற்குக் காரணம் என்ன?

ஒரே வார்த்தையில் சொன்னால் அலட்சியம்! வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக அரசின் நிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக பொறுப்பற்ற முறையில் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ஓராண்டு நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணம் என்று சொல்லலாம். ஆனால், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வந்தால், அந்த நஷ்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு போனால் அதைப் பொறுப்பற்ற நிர்வாகம் எனச் சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

இதற்கு அடிப்படையாக இரண்டு மனோபாவங்கள் இருக்கின்றன. ஒன்று, பொதுத்துறை நிறுவனங்களுக்கு லாபம் முக்கியமல்ல, சேவைதான் முக்கியம் என்ற தத்துவம். இந்தத் தத்துவமே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை மக்கள் பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்கள். அவற்றில் லாபம் வந்தால், அவை மக்களுக்குக் கிடைக்கும் லாபம். அந்தப் பணம் ஏதோ ஒரு வடிவில் மக்களுக்குத் திரும்பி வரும். சில ஆண்டுகளுக்கு முன் எல்.ஐ.சி., குடிதண்ணீர்த்  திட்டங்களுக்கு நிதி உதவியதைப்போல. தனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஈட்ட வேண்டியதில்லை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் அந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைக்கொண்டு தங்களது செலவுகளை எதிர் கொள்ளும் அளவிற்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற நிலையிலாவது, காத்திரமாக இருக்க வேண்டுமல்லவா? அவை நஷ்டத்தை சந்திக்கின்றன அல்லது அந்தக் கடன்களை மக்கள் பணத்திலிருந்துதானே செலவிட நேரும்? அதாவது, அந்தச் சுமை மக்கள் மீதுதானே விழும்?

நாம் செலவிடுவது மக்கள் பணம் என்ற உணர்வு இல்லாமல், ‘ஊரான் வீட்டுப் பணம்’ என்ற நினைப்பில் ஊதாரித்தனமாக வாரி இறைப்பது மற்றொரு மனோபாவம்.

இந்த மனோபாவங்களில் சிக்குண்டதால்தான் நம் பொதுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் எதிர்கொள்கிறோம்.

மின் வாரியம்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2005-06ல் மின் வாரியத்தின் நஷ்டம் 4,911 கோடி ரூபாய். இந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி அதன் நஷ்டம் 40,659 கோடி. அதாவது, ஐந்தாண்டுகளில் நஷ்டம் சுமார் பத்து மடங்குகளாக அதிகரித்திருக்கிறது.  இந்த நஷ்டம் எப்படி சமாளிக்கப்பட்டது? கடன் வாங்கித்தான். 2005-2006ல் மின் வாரியம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனின் அளவு 9,300 கோடி. அதுவே இந்த ஆண்டு மார்ச்சில் 40,300 கோடி. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அது 53,000 கோடியைத் தாண்டிவிடும் என்கிறார் முதல்வர்.

தமிழக அரசு என்ற பெரிய அமைப்பின் கடனே ஒரு லட்சத்து ஆயிரம் கோடிதான். ஆனால், மின் வாரியம் என்ற ஒரு நிறுவனத்தின் கடன் மட்டும் 53 ஆயிரம் கோடி என்றால், அது எப்படி நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவேளை மின் சப்ளை என்பது லாபம் தராத தொழிலோ? தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் இதற்கான விடையைக் கண்டுபிடித்து விடலாம்.

"கடந்த திமுக ஆட்சியில் ஏழு தனியார் மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் அந்தத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 9 சதவிகிதம்தான் (1150 மெகாவாட்). ஆனால், மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 35 சதவிகிதம் அந்தத் தனியார் நிறுவனங்களுக்குப் போகிறது. உதாரணமாக, பிள்ளைப்பெருமாள்நல்லூரில் 335 மெகாவாட் திறன்கொண்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டிற்கு 18.54 ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. 335 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அந்நிறுவனத்தை நிர்மாணிக்க சுமார்  600 கோடி செலவாகி இருக்கும். ஆனால், அதைவிட பல மடங்கு லாபத்தை அந்நிறுவனம் சம்பாதித்துவிட்டது. எல்லா தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டன" என்கிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.விஜயன்.

தனியாருக்கு லாபம் தரக்கூடிய ஒரு தொழிலை அரசு நடத்தும்போது மட்டும் ஏன் நஷ்டம் வருகிறது? மேலே சொன்ன மனோபாவங்கள்தான் காரணம்.

இந்தச் சிக்கல் திடீரென ஒரு நாள் நள்ளிரவில் ஏற்பட்டதல்ல. தொடர்ந்து பல ஆண்டுகளாக மின் வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது என்பது அதன் அமைச்சர்கள்,அதிகாரிகள், ஏன் ஊழியர்களுக்குக் கூடத் தெரியும்.

"மின்வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசின் சார்பில் வெள்ளையறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், முந்தைய திமுக ஆட்சி விட்டுச்சென்ற கடன் தொகை 3,359 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவையுள்ளது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு, மின்வாரியத்தை கடனில் இருந்து மீட்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்ததாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், மின்வாரியத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மின்சார வாரியம் மரணப்படுக்கையில் தள்ளப்பட்டதற்கான காரணம் இதுதான்" என்கிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.விஜயன்.

சரி, மின்வாரியம் நஷ்டத்தைச் சந்திக்கிறது எனத் தெரிந்தும் அதைத் தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

அங்குதான் வருகிறது வாக்கு வங்கி அரசியல். மாதம் 600 யூனிட்களுக்குமேல் பயன்படுத்துவோருக்கு ஆகஸ்ட் 2010ல் 1 ரூபாய் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், அது தேர்தலைப் பாதிக்கும் எனப் பயந்து, அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டது. வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல, இலவசங்களை முன் நிறுத்தி நடத்தப்படும் அரசியலும் ஒரு காரணம்!

விவசாயிகளுக்கு அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. மின்சாரம் என்பது காற்றைப்போல இயற்கையே இலவசமாகக் கொடுக்கும் பொருள் அல்ல. ஏதோ ஒரு இடத்தில் அது உற்பத்தி செய்யப்படும் பொருள். எனவே, அதற்கு ஒரு செலவு இருக்கிறது. அதை யாராவது ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பது அரசின் முடிவு என்றால், அரசுதான் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தை, அதற்கான கட்டணத்தை மின்வாரியத்திற்கு செலுத்துவதில் மாநில அரசு காட்டுவது இல்லை. இலவச மின்சாரம் பெற்ற வகையில் இதுவரை சுமார் 5,600 கோடி ரூபாய் மின் வாரியத்திற்குத் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளது. மின் வாரியம் திவாலாகாமல் என்ன செய்யும்?



























ஆவின்

பத்தாண்டுகளுக்கு முன்பு லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக இருந்தது ஆவின். 2000ம் ஆண்டு அது 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. ஆனால், அதன் பின் அது படிப்படியாகச் சரிந்து, இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது. இப்போது மாதா மாதம் அரசிடம் 16 லட்ச ரூபாய் மானியம் பெறும் நிறுவனமாக அது இருக்கிறது.

‘ஆவின் நிறுவனம் நலிந்ததற்குக் காரணம், ஊழல்’ என்ற ஒரு கருத்தை அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் சொல்கிறார்கள். சத்தான பால் கிடைக்க வேண்டும் என்றால், மாடுகளுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பாலுக்கு அரை கிலோ அடர் தீவனம் கொடுக்க வேண்டும். 300 ரூபாயாக இருந்த கால்நடைத் தீவனத்தின் விலை தற்போது 575 ரூபாய். பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 65 சதவிகிதம் தீவனத்திற்காக செலவிட வேண்டியுள்ளது என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

இந்தத் தீவனப் பிரச்சினையைத் தீர்க்க, முன்பு ஆவின் நிறுவனமே கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்தது. சென்னை மாதவரம், மதுரை, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் தீவனம் உற்பத்தி செய்யப்பட்டது. தரமான மாட்டுத் தீவனமாக அது இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதை ஆவின் நிர்வாகம் மூடிவிட்டது. "ஆவின் நிறுவன அதிகாரிகளில் பலர், தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆவின் நிறுவனம் நலிவடைவதற்கு முக்கியக் காரணமே அதுதான். ஆவின் மாட்டுத் தீவனத்தை மூடியதற்கும் அதுதான் காரணம். ஆவின் நிர்வாகத்தில் ஊழலைக் களைந்து, நிர்வாகத்தை சீர்படுத்தினாலே லாபகரமான நிறுவனமாக ஆவினை மாற்ற முடியும்" என்கிறார், ஆவின் நிறுவன ஊழியர் ஒருவர்.

இதன் வீழ்ச்சிக்கு வாக்கு வங்கி அரசியலும் காரணம். "15.02.2011 கணக்குப்படி, ஆவின் நிறுவனம் 359 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தது. ஆவின் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி கடந்த பிப்ரவரியில் மாநில அளவில் போராட்டம்  நடத்தினோம். அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லிட்டருக்கு 2.46 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆவினுக்கு மேலும் 100 கோடி ரூபாக்கு நஷ்டம் ஏற்படும் நிலையை உருவாக்கிவிட்டனர்" என்கிறார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முகமது அலி.

அப்போதே பால் விலையை கொஞ்சம் உயர்த்தி இருந்தால் மக்களுக்கு சுமை தெரிந்திருக்காது. ஆனால், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அப்போதைய திமுக அரசு பால் விலையை உயர்த்தவில்லை.













போக்குவரத்துக் கழகங்கள்

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமைக்கு தமிழக முதல்வர் கூறியுள்ளது போல, டீசல் விலை உயர்வும் முக்கியக் காரணம்.

"டீசல் உயர்வு போக்குவரத்துக் கழகங்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், இதுவரையில் 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்வு என்றாலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது" என்கிறார், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.பி.அன்பழகன் (தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 321 பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன).

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தபோதும் கூட மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த 10 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடைசியாக, 16.12.2001 அன்று பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

டீசல் விலை உயர்வு ஒரு காரணம்தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. தொலை நோக்கற்ற நிர்வாகமும் காரணம். உதாரணமாக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில், பேருந்துகளுக்கு பாடி கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது உட்பட அனைத்துப் பணிகளையும் போக்குவரத்துக் கழகங்களே செய்தன. நாகர்கோவில், பொள்ளாச்சி, திருச்சி, சென்னை உட்படப் பல இடங்களில் அதற்கான பணிமனைகள் இயங்கின. பெயிண்ட் கூட சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. முழுக்க முழுக்கப் போக்குவரத்துக் கழகங்கள் சொந்தக்காலில் நின்றன. ஆனால், 1990க்குப் பிறகு இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுக்கப்பட்டது. இதனால், போக்குவரத்துக் கழகங்களின் பணம் பெருமளவில் விரயமாகியுள்ளது.

இதை தவிர இலவசங்களை முன்னிறுத்திய அரசியலும் வாக்கு வங்கி அரசியலும் காரணங்கள்.

12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மாநில அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. 27 லட்சத்து 52 ஆயிரத்து பள்ளி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். ஆனால், இத்திட்டத்தின் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கும் மாநில அரசு, அதற்கான பணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிப்பதில்லை. இந்த வகையில் 1989 முதல் சுமார் 1,500 கோடி ரூபாய் அரசு பாக்கி வைத்துள்ளது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு மாதச் சம்பளம் சராசரியாக  10 ஆயிரம். இதன் மூலம் கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி வீணாகிறது. ஓராண்டுக்கு 24 கோடி ரூபாய் விரயமாகிறது என்றும் சொல்லப்படுகிறது.


இலவசங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள் இலவசங்களாலும் விரயத்தினாலும் நிதி நெருக்கடியைச் சந்தித்து மரணப் படுக்கையில் இருக்கும் நேரத்தில் கூட அரசுப் பணத்தைத் தங்கள் விளம்பரத்திற்காகச் செலவழிப்பதில் கூச்சமோ, தயக்கமோ காட்டுவது கிடையாது.

உதாரணமாக, கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்குச் செலவிடப்பட்ட தொகை 311 கோடி ரூபாய். தமிழை வளர்ப்பதுதான் நோக்கம் என்றால், அறிஞர்கள் அரங்குக்குள் கட்டுரைகள் வாசித்து அவற்றை ஆழமாக விவாதிக்கும்படி மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், இதில் பத்தில் ஒரு பங்குச் செலவில் மாநாடு முடிந்திருக்கும். ஆனால், இந்த மாநாட்டின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

இன்னொரு உதாரணம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. இதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 4,000 கோடி ரூபாய். இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பங்கை ஆவினில் முதலீடு செய்திருந்தால், அதன் நஷ்டம் சரி செய்யப்பட்டு இன்று அது நிமிர்ந்து நிற்கும். இந்தப் பணத்தை போக்குவரத்துக் கழகத்திற்குச் செலவிட்டிருந்தால், அதற்கு ஏற்பட்ட 6,150 கோடி ரூபாய் இழப்பில் 75 சதவீதம் ஈடுகட்டப்பட்டிருக்கும்.

நிதி நெருக்கடி நிலவிய நேரத்திலும் ‘அகலக் கால்’ வைக்கவும் ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை மாத்திரம் 1,092 கோடி!
போட்டி அரசியல் நிலவுகிற தமிழகத்தில் இன்றைய ஆளும் கட்சியும் முந்தைய ஆளும் கட்சிக்குச் சற்றும் சளைக்கவில்லை.  இலவச அரிசிக்காக 4,500 கோடியும் விசிறி, மிக்சி, கிரைண்டருக்காக 1,250 கோடியும் ஒதுக்கியிருக்கிறது (முழுப்பட்டியலுக்குக் காண்க: பெட்டிச் செய்தி).

ஏழைகள் இருக்கிற வரைக்கும் இலவசங்கள் இருக்கும் என வசனம் பேசுவது எளிது. அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த இலவசங்கள் என அவற்றை நியாயப்படுத்தவும் கூடச் செய்யலாம். ஆனால், எதை இலவசமாகக் கொடுப்பது என்பதைக் குறித்து ஆள்கிறவர்களுக்குத் தெளிவு வேண்டும். கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம். மருத்துவ வசதிகளை இலவசமாகக் கொடுக்கலாம். அவை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதுகாலத்திற்குப் பின் உதவும். சுருக்கமாகச் சொன்னால் கல்வி, மருத்துவ வசதி இலவசங்கள் ஒரு வகையான முதலீடு. ஆனால்,வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியோ, மிக்சி, கிரைண்டரோ முதலீடு அல்ல, அவை லஞ்சம்.

உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. அந்தப்  பொருளைப் பெறுபவருக்குப் பதில், வேறு யாரோ கொடுக்கும்போது அதை இலவசம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் அந்த யாரோ வேறு யாரும் இல்லை, நாம்தான்!
(புதிய தலைமுறை)

No comments:

Post a Comment