:""தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் இப்போது கும்பல் ஆட்சி நடக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன்,'' என, தே.மு.தி.க., நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆவேசமுற்றார்.
மதுரையில் நேற்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவை நடத்தி விஜயகாந்த் பேசியதாவது :பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதை சொல்லியா ஓட்டு கேட்டீர்கள். மத்திய அரசு பாகுபாடின்றி
நிதி தருகிறது. இதை கூறினால், காங்கிரசுக்கு விஜயகாந்த் ஆதரவு என சொல்வார்கள். நான் நியாயத்தை சொல்கிறேன்.மாற்றம் வேண்டும் என மக்கள் ஓட்டு போட்டு உங்களை கொண்டு வந்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை ஏமாத்திட்டீங்க. குடும்ப ஆட்சி போய் இப்போ கும்பல் ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எது தேவை, உடனடி தேவைனு தெரிஞ்சு செய்யுங்க. பால், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்திருக்கலாமே?உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சட்டசபைக்கு செல்ல முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் போகாமல் இருக்கலாமனு? கேட்கிறாங்க. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போது சென்றார்களா? பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன். மதுரையில் பேனர் வைக்கக்கூட விடமாட்டேன்றாங்க. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? கடந்தாட்சியில் இப்படிதான் நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் ஜால்ரா போடக்கூடாது. யாருக்கும் சகாயம் செய்யாதவர் என்று கூறப்பட்ட கலெக்டர் சகாயம், இன்று அ.தி.மு.க.,வுக்கு சகாயம் செய்கிறார். கண்ணப்பன்கள் எல்லாம் மாறிட்டேதான் இருப்பாங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் எங்கே, எப்படி இருப்பார்னு தெரியாது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல், தே.மு.தி.க.,வை யாராலும் மறைக்க முடியாது. நான் நல்ல தொண்டர்களை வளர்த்துஉள்ளேன். அவர்களை சீண்டி விடாதீங்க. தட்டி எழுப்பிடாதீங்க. இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment