''தொடர் மின்வெட்டால் என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. இதை உணர்ந்து மக்களுக்கு பரிகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்திற்கு
கொண்டுவருவதே தனது லட்சியம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வருகிறார். விவசாயமும், தொழிலும் வளர்ந்தால்தான், தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு மின்சாரம் இன்றியமையா தேவையாகும். ஆனால், எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் உள்ளது. விவசாயத்திற்கு சரியாகவே மின்சாரம் கிடைக்காதபோது, மகசூலை எப்படி அதிகரிக்க முடியும். போதிய மின்சாரம் இல்லாததால் தொழில் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த இரண்டு நாட்களாக கோவையில் இதற்காக ஆர்ப்பாட்டமும் நடந்து உள்ளது. தினமும் 8 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மின் வெட்டே இருக்காது என கூறப்பட்டது. ஆனால், இப்போது, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படிப்படியாக மின் தட்டுப்பாடு நீக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகாவது, மின்வெட்டு நீங்காதா என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடைமுறையில் மின் பற்றாக்குறை நீடித்துக்கொண்டே போகிறதே தவிர, எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகத்தில் தொழில் துவங்குபவர்களும் இப்போது தயங்குகின்றனர். தமிழகத்தில் தொழில்களை விரிவாக்கம் செய்ய முடியாமல் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மின்சாரமே கிடைக்காதபோது, மின்கட்டணத்தை அபரிதமாக உயர்த்துவதற்கு அரசு பரிந்துரைத்துள்ளது. என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணர்ந்து, மக்களுக்கு பரிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment