Thursday, March 8, 2012

அல்போன்சா குடும்பத்தார் மீது வினோத்குமாரின் தந்தை புகார்!

""என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; நடிகை அல்போன்சா குடும்பத்தினர், திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், என, வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார். அல்போன்சா உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகை அல்போன்சா வீட்டில், அவரது காதலன் வினோத்குமார், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை அல்போன்சா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். வினோத்குமாரின் மரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில்,

காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என, அவரது தந்தை பாண்டியன், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தார்.

இதுகுறித்து பாண்டியன் கூறியதாவது: என் மூத்த மகன் வினோத்குமார், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். என் மைத்துனர் பாலு வீட்டில் தங்கி, சினிமா தொடர்பான பயிற்சிக்கு சென்று வந்தார். கவசம் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்து, திரையிடத் தயாராகவுள்ளது.

கடன் தர மறுத்தான் : என் மகன் நடனத் திறமையை வளர்த்துக் கொள்ள, நடன இயக்குனர் ராபர்ட் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். நான்கு மாதமாக, அவரது வீட்டிலேயே தங்கினார். என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் பெற்று, ராபர்ட்டிடம் கொடுத்தார். ராபர்ட் அவரது நண்பருடன் சேர்ந்து, சங்கு என்ற படம் எடுப்பதற்கான தயாரிப்பு செலவுக்கு, 50 லட்சம் ரூபாயை என் மகனிடம் கேட்டுள்ளனர். என் மகன் தர மறுத்து விட்டான். இது பற்றி என்னிடமும் கூறினான்.

அல்போன்சா மூலம் "அஸ்திரம் : அந்த படத்தில், ஒரு கதாநாயகனாக உன்னை போடுகிறேன் என கேட்டும் பணம் தராத நிலையில் தான், எதிர் வீட்டில் குடியிருந்த அவரது அக்கா, நடிகை அல்போன்சாவை மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த 4ம் தேதி, நள்ளிரவு திடீரென, மகனின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அல்போன்சா, "உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறி வைத்து விட்டார். நாங்கள் பதறியடித்து அங்கு சென்ற போது, கார் "பார்க்கிங்கில், தரையில் போட்டு வைத்திருந்தனர். அவனது மூக்கு, வாய் பகுதியிலும் ரத்தம் இருந்தது.

அவனது அறைக்கு சென்று பார்த்த போது, சுவரில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்தது. சம்பவத்தன்று, இரவு 7.30 மணிக்கு என்னிடம் பேசினான். தான் நன்றாக இருப்பதாகவும், மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடுமாறு, எனக்கு அறிவுரையும் கூறினான். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், என் மகன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

"பணம் தர மறுத்ததால், என் மகனை, அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட், அவரது அம்மா மூவரும் சேர்ந்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனரிடம் புகார் செய்தேன். என் மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன். இவ்வாறு பாண்டியன் கூறினார்.(dinamalar)

No comments:

Post a Comment