Sunday, August 12, 2012

அனைவரையும் அரவணைக்கும் அரங்கன்

ஸ்ரீரங்கம் - இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டாலே மனசுக்குள் ஒரு பிரமாண்டம் வந்து அமர்ந்துகொள்கிறது. படித்தது, கேள்விப்பட்டது, தரிசித்தவர்கள் சொன்னது என்று ஏற்கெனவே பிரமிப்பு ஆட்கொண்டிருந்ததால், இந்த ஆலயத்துக்குள் நுழையும்போதே பக்திக் குறுகுறுப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து விடுகின்றன. 

ஒரு சிறு பூனை பாற்கடல் முழுவதையும் குடித்துவிடத் துடிக்கும் பேராவல் தனக்கு இருந்ததாக ராமகாவியத்தை எழுதத் துவங்குமுன் கம்பர் குறிப்பிடுகிறார். ‘திருவரங்கம் கோயில் சிறப்பு.... திசைமுகனால் அல்லாது என்சோர்வந்த சொல்லில் சுருங்குமோ?’ என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தன் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பிரமித்து மயங்குகிறார். ஸ்ரீரங்கத்தைப் பற்றிச் சொல்ல வரும் யாவரும் இந்தத் திகைப்பால் திக்குமுக்காடுவது இயற்கையே.

அந்தப் பாற்கடலிலிருந்து எவ்வளவுதான் குடிக்க முடிகிறது
என்று பார்ப்போம்! ரங்கநாதர் இங்கு வந்து நிலைகொண்ட புராணத்தை ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடிய ஆன்மிகர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என்றாலும் இந்தத் தொடர் சம்பிரதாயப்படி அதனை மீண்டும், கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் அலசுவோம்.

இலங்கேஸ்வரனை வீழ்த்தி, சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி, அரியணை ஏறி, முடிசூட்டிக்கொண்டான், ராமன். அந்த பட்டாபிஷேக வைபவத்தைக் காண வந்திருந்த அனைவரும் பரிசுப் பொருள் பெறும் ராஜாங்க மரபாக, பலவகைப் பொருட்களைப் பெற்றார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவன் விபீஷணன். யாருக்குமே கிடைத்திருக்க முடியாத பொக்கிஷம் அவனுக்குக் கிடைத்தது - ஸ்ரீரங்கநாதர். ராமனின் குலமான இக்ஷ்வாகு வம்சத்தின் குலதெய்வம் ரங்கநாதர். தசரதன் ஈறாகத் தன் முன்னோர்கள் வழிபட்ட தங்கள் குலதெய்வ விக்ரகத்தை அத்தனை எளிதாக ராமனால் எப்படிக் கொடுக்க முடிந்தது? அதன் விளைவாகத்தான் அவனே சீதையைத் தன்னிடமிருந்து பிரித்து கானகம் அனுப்பினானோ? அதனால்தான் ராமனுக்குப் பிறகு அயோத்தி பேசப்படவில்லையோ? எது எப்படியாயினும் விபீஷணனைப் பொறுத்தவரை அவனுக்குக் கிடைத்த வெகுமதி மதிப்பிற்கடங்காத பெரும் பேறு. அயோத்தியுடன் சேர்த்து இலங்கையையும் ராமனையே ஆளச் சொல்லி தான் அவனுக்கு அடிமையாக சேவகம் புரிய அவனுக்கு ஆசைதான். ஆனால், ராவண வதம் முடியுமுன்னரே, தன்னை இலங்கைக்கு அரசனாக முடிசூட்டுவதாக வாக்களித்த ராமன், அதற்கு ஒப்பமாட்டான். ஆகவே அவனுடைய குலத்தோன்றல்கள் காலங்காலமாக வழிபட்டுவந்த அர்ச்சாவதாரத்தை இலங்கைக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, தானும் தன் மக்களும் வழிபட்டு வந்தால், இங்கும் ராமராஜ்யம் வேரூன்றாதா என்று ஏக்கமுற்றான் விபீஷணன். 

ராமர் பட்டாபிஷேக அன்பளிப்பாக விபீஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் வழங்கப்பட்டார் என்ற இந்த சம்பவத்தை சில வைணவ சான்றோர்கள் ஏற்கவில்லை. அப்படி ராமன் கொடுத்தானானால் அதற்குப் பிறகுத் தன் குலதெய்வமாக எதை அவன் வழிபட்டிருப்பான் என்று நியாயமான வாதத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள். ஆகவே, ராமன் அயோத்தியை 11000 ஆண்டுகள் சிறப்புற ஆட்சி செய்தபிறகு, தான் பரமபதம் அடையுமுன்னர், இலங்கையிலிருந்து விபீஷணனைக் கூப்பிட்டு ரங்கநாதரை ஒப்படைத்தான் என்று சொல்கிறார்கள். முடிசூட்டு விழாவில் அவனுக்கு அந்த அர்ச்சாவதாரத்தை வழங்குவதாக வாக்களித்துவிட்டு, பிறகு, தான் வைகுந்தம் ஏகும் காலம்வரை குலதெய்வம் என்ற பாரம்பரியத்தை விடாமல், உரிய வழிபாட்டைக் கடைபிடித்து, தன் வாழ்க்கையின் நிறைவில், அப்பரிசினை அளித்தான் என்று விளக்கமும் அளிக்கிறார்கள். 

இதுவும் சரியாகத்தான் தோன்றுகிறது. சரி, பட்டாபிஷேக சன்மானமாகவோ, பரமபதம் எழுந்தருளும்போது அன்பளிப்பாகவோ அளிக்கப்பட்ட ரங்கநாதர் ஏன் இலங்கைக்குப் போகவில்லை? கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே இலங்கை இருந்தும், தமிழ்நாடு வரை அவரை சுமந்துவந்துவிட்ட விபீஷணனால் அதற்கடுத்து ஏன் எடுத்துச் செல்ல இயலவில்லை?

தன்னை வழிபட்ட இக்ஷ்வாகு குலத்தை விட்டுப் பிரிய ரங்கநாதருக்கு விருப்பமில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் இலங்கையை நெருங்க நெருங்க, ராவணனின் கொடுங்கோன்மை ரங்கநாதருக்கு அதிகம் உறுத்தியிருக்க வேண்டும். ராமனுடைய மனைவியை முறை தவறி சிறைப் பிடித்தவனை, ராமனை அதிகமாக மனதளவில் துன்புறுத்தியவனை, அந்த ராவணனை அவர் மன்னிக்கத் தயாராக இருந்திருக்க மாட்டார். ராவணன் இறந்துவிட்டாலும் அவனுடைய பாவக்கறை அந்த பூமியில் இன்னும் ஆறாமலும் அதன் துர்நாற்றம் நீங்காமலும்தான் இருக்கும். அந்த பூமியில் தான் நிலைகொள்ளாதிருப்பதே நல்லது என்று நினைத்திருக்கக்கூடும். ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது அந்த வம்சத்தின் ஆதி, மூத்த உறுப்பினர் என்ற பொறுப்பில் அவர் இவ்வாறு கோபப்பட்டிருக்கலாம். ராமனின் அன்புக்குப் பாத்திரமானவன்தான் விபீஷணன், ‘எம்முழை அன்பினந்த அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்’ என்று பாராட்டிய ராமனால் தழுவப் பெற்றவன்தான். ஆனாலும், தன் குலத்தோன்றலுக்கு தீங்கிழைத்தவனுடைய சகோதரனுக்கு அருள் புரியத் தயங்குவதும் ரங்கநாதரைப் பொறுத்தவரை நியாயம்தான். இறை அவதாரம்தான் என்றாலும், சாதாரண மனித வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ராமன் மீது, அந்த மனித இயல்புப்படியே ரங்கநாதர் பாசம் காட்டியதும் நியாயம்தானே! 

அதனாலேயே, தன்னை விபீஷணன் மாலைக்கடன் மேற்கொள்வதற்காகக் கீழே வைத்தபோது, அங்கேயே நிலை கொண்டுவிட்டார், ரங்கநாதர். அயோத்தியிலிருந்து எத்தனையோ நாட்கள் பயணம் மேற்கொண்டு வந்திருக்கக்கூடிய விபீஷணன், ஆங்காங்கே மாலைக்கடன் மேற்கொண்டிருந்திருப்பான்; அங்கெல்லாம் ரங்கநாதரை பூமியில் வைத்திருப்பான். அங்கே எந்த இடத்திலும் நிலை கொள்ளாத ரங்கநாதர், இங்கே, தமிழ்நாட்டில் ஏன் நிலை கொண்டார்? இதுவும் ராமனை முன்னிட்டுதான். ராவணனைக் கொன்ற பாவம் தீர தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்துக்கு வந்த ராமர், லிங்கம் ஸ்தாபித்து, வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றாரே, அந்தப் புனிதப் பகுதியில், தான் கோயில் கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். 

இவ்வாறு ரங்கநாதர் தமிழ்நாட்டில் நிலைகொண்டதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் நடத்தியபோது அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவன், சோழநாட்டு மன்னன் தருமவருமன். தசரதர், தம் குலதெய்வமான ரங்கநாதருக்கு முறையாக வழிபாடு நடத்தி யாகத்தை மேற்கொண்டதைக் கண்ட அவன், பிரணவாகார விமானத்தில் வீற்றிருக்கும் அந்த ரங்கநாதர் தன் நாட்டிலும் எழுந்தருள வேண்டும் என்று விரும்பினான். அதற்காக, தன் நாட்டிற்குத் திரும்பிய அவன் நெடுந்தவத்தில் ஈடுபட்டான். இவனுடைய உள்ளக்கிடக்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும், இலங்கைக்கு விபீஷணனுடன் பயணப்பட்ட ரங்கநாதர் சோழநாட்டிலேயே தங்கிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. 

ஆனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் விபீஷணன்தான். இலங்கையில் ராமராஜ்யத்துக்கு வழியே இல்லையா என அவன் ஏக்கமுற்றான். அப்போது, ‘‘கவலைப்படாதே விபீஷணா. நான் இங்கே அமைந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்தக் காவிரியாற்றின் அழகுச் சூழலில், சோலைவனத்தின் இதமான தென்றலில் நான் மெய் மறந்துவிட்டேன்; இன்னொன்று, தசரதன் காலத்திலிருந்தே தன் பகுதிக்கு நான் எழுந்தருள வேண்டும் என்று தரும வருமன் தவமிருந்தான். அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றவும் நான் இப்படிச் செய்தேன். ஆனால், நீ வருடந்தவறாமல் என்னை இங்கே வந்து தரிசிக்கலாம். நீ செல்லும் திக்கு நோக்கியே, உன் இலங்கை இருக்கும் திசை நோக்கியே நான் பள்ளிகொள்வேன்’’ என்று ஆறுதலாக, அசரீரியாக ஒலித்தார் அரங்கன். 

விபீஷணனும் வீம்பு பிடிக்கவில்லை. ‘ராமன் எனக்கு சன்மானமாகக் கொடுத்தது; நீங்கள் எனக்குதான் உரிமையானவர்; ஆகவே நான் எடுத்துச் செல்வேன், நீங்கள் வரவேண்டும்’ என்றெல்லாம் சொந்தம் கொண்டாடவில்லை. ராமனுடைய ஏழாவது சகோதரனல்லவா, அதனால் அவனுடைய பெருந்தன்மை இவனுக்கும் வந்து பொருந்தியிருந்தது! ரங்கநாதரை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கிவிட்டு இலங்கை நோக்கிச் சென்றான். அவன் போன திக்கையே ரங்கநாதர் அன்று முதல் இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
Source:http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=577&Cat=3

No comments:

Post a Comment