Tuesday, November 27, 2012

எப்போதெல்லாம் மின்தடை செய்யப்படும் என்று மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்


 சென்னையைப் போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் எப்போது மின்தடை செய்யப்படுகிறது என்பதை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்போம் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும் கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது என்றும், மின்தடை குறித்து மக்களுக்கு ஏன் முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்றும் விளக்கமாக அறிக்கை அளிக்க அவர்கள் மின்வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. முதன்மை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றம் கேட்ட அறிக்கையை சமர்பிப்பபது மற்றும் மின் உற்பத்தியை அதிகரித்து மின்தடை நேரத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்னர் மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில்,
சென்னையில் எப்படி மின்தடை செய்யப்படும் நேரம் குறித்து அறிவிக்கப்படுகிறதோ அதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மின்தடை நேரம் குறித்து இனி ஊடகங்களில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 3ம் தேதி நடக்கிறது. நீதிமன்றத்தில் இது குறித்து பதில் அளித்த பிறகு சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் எப்பொழுது மின்தடை செய்யப்படும் என்பது குறித்து ஊடகங்களில் அறிவிக்கப்படும் என்றனர்.

1 comment: