Saturday, November 20, 2010

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: பிரதமர்


 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டையே உலுக்கிவரும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவேயில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"ஹிந்துஸ்தான் டைம்ஸ்' தில்லியில் சனிக்கிழமை நடத்திய மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க வழியேற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். அரசுக்கு இதில் எவ்வித அச்சமும் கிடையாது. எதைக் கண்டும் அரசு பயப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இவை அனைத்தும் சரிவர செயல்பட வேண்டுமெனில் முக்கியமான ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. விவாதத்துக்கு அரசு ஒரு போதும் அஞ்சியதில்லை.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெற்றால்தான் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், துணை மானிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடியும். இதைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றம் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
ஜனநாயக அமைப்பில் எது குறித்தும் விரிவாக விவாதிக்க வழி உள்ளது. தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க அணுகுமுறைகள் உள்ளன என்றார். இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதால் இதற்கு மேல் இந்த விஷயத்தில் பதிலளிக்க முடியாது என்று கூறினார் மன்மோகன் சிங்.
முன்னதாக மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியதாவது: இப்போது பன்முக சவால்களை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. மேலும் நாம் இப்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம். அதேபோல பன்முக முரண்பாடுகளும் உள்ளன.
1990-ம் ஆண்டு தாராளமயம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்தாலும் அதை இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு மிகச் சிறப்பாகவே செயலாற்றியுள்ளோம்.
சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போதிலும் அதனால் அதிகம் பாதிக்கப்படாமல் முன்னேற்றம் கண்டு வருகிறோம். கடந்த ஆண்டு நமது பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்துக்கு உயரும்.
அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி,சுகாதாரத்துக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இதன் மூலம்தான் தொழிற்சாலைகள் அதிகம் உருவாகி வேலை வாய்ப்பு பெருகும். தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதவையாக இருக்கவேண்டும் என்றார் மன்மோகன் சிங்.(dinamani)

No comments:

Post a Comment