Saturday, November 20, 2010

ஆ.ராசா அனுமதித்த முக்கிய நியமனங்கள் நிறுத்தி வைப்பு



தொலைத் தொடர்புத் துறையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அனுமதித்த சில முக்கிய பொறுப்புகளுக்கான நியமன முடிவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இத்தகவல் தனியார் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய நியமனங்கள் குறித்து இப்போது தொலைத் தொடர்புத் துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கபில் சிபல் மறுபரிசீலனை செய்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பதவி, எம்டிஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவி, டிராய் அமைப்பின் உறுப்பினராக தொலைத் தொடர்புத் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நபர் ஆகிய பொறுப்புகளுக்கான நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்த நியமன முடிவுகள் அனைத்துக்கும் பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒப்புதல் அளித்திருந்தது. அமைச்சரவையின் நியமனக் குழுவின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இவை அனைத்தும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் | 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.
முக்கிய அதிகாரி பணியிடமாற்றம்: இதனிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, அந்த அமைச்சகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். தொலைத் தொடர்புத் துறையை கூடுதலாக பொறுப்பேற்றுள்ள கபில் சிபல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
(dinamani)

No comments:

Post a Comment