Saturday, November 20, 2010

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல்



மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்தப் போவதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக ஜெர்மன் உளவுத்துறையினர் கருதுகின்றனர். இதைப் பற்றி மேலும் தீவிரமாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஜெர்மன் உளவுத்துறை அதிகாரிகள் சேர்ந்து நடத்திய இந்த புலனாய்வில் வெளிப்பட்ட தகவல்கள் வருமாறு: ஒரு கண் கொண்ட, நீண்ட தாடி வைத்து கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் இலியாஸ் காஷ்மீரி, என்பவன் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி எனும் பயங்கரவாதக் குழுவின் தலைவனாக உள்ளான். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த இவனுக்கு இப்போது வயது 40. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில் பயிற்சி பெற்றவன். அங்கிருந்து வெளியேறி அல்கொய்தா அமைப்பின் உதவியுடன், தனக்கென ஒரு பயங்கரவாதக் குழுவை ஏற்படுத்திக் கொண்டான். ஒசாமாவின் அதிதீவிர சீடனாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள காஷ்மீரி, சமீப காலமாக, ஜிகாத் எனப்படும் பயங்கரவாத செயல்களை தெற்கு ஆசியாவைத் தாண்டி முன்னெடுத்து வருகிறான். அடுத்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளான்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று, பாரீஸ், லண்டன் மற்றும் பெர்லின் நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்காக, நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவன் இன்னொரு ஒசாமா பின்லேடன். இவனது தாக்குதல் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரிக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் காஷ்மீரி முதலிடத்தில் உள்ளான்.

No comments:

Post a Comment