Wednesday, November 3, 2010

விஜயகாந்த்துக்கு கிருஷ்ணசாமி அழைப்பு






 அதிமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

 இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 அதிமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்தக் கட்சிக்கென்று வாக்கு வங்கி உள்ளது. தமிழக மக்கள் நலன் கருதி வாக்குகள் பிரியாமல் இருக்க அதிமுக அணிக்கு தேமுதிக வர வேண்டும்.
 ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசா பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை நியாயமாக நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
 மக்கள் பிரச்னைகளுக்காக அதிமுக நடத்தும் போராட்டங்களில் கூட்டணிக் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
 சென்னையில் அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு மாநகருக்கு உள்ளேயே வீடு வழங்கக் கோரியும், சட்ட மேலவையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைக் கண்டித்தும் நவம்பர் 17-ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும்.
 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக அளித்த, ""ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்'', ""3 சென்ட் இலவச வீட்டுமனை'' உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 6-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் கிருஷ்ணசாமி.

No comments:

Post a Comment